சனி, 20 ஏப்ரல், 2024

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது”

 19 04 2024 

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.    

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பலர் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியுள்ளனர்.

சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி வரை 63.20% வாக்கு பதிவாகி இருந்தன.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. எனவே வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டு இன்னும் நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், மொத்தமாக (7:00 மணி நிலவரப்படி) தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் வாக்கு சதவீதம் குறித்து கூறியதாவது:

“7 மணிவரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் சேர்க்கப்படவில்லை. கடந்த முறை 7 மணி நிலவரத்தில் பெற்ற வாக்குப்பதிவை விட இம்முறை கூடுதலாக பதிவாகி உள்ளது. 3 மணிக்கு மேல் அதிகப்படியானவர்கள் வாக்கு செலுத்த வருகை தந்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் எல்லை பகுதிகளில் எஸ்எஸ்டி, எஃஎஸ்டி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைப்பெற்றது.சிறிய அளவான பிரச்சனைகள் மட்டுமே வந்தது. அதுவும் தீர்த்து வைக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/elections-were-held-smoothly-in-tamil-nadu-election-commissioner-satyapratha-saku.html