19/04/2024
source https://tamil.indianexpress.com/tamilnadu/ekanapuram-village-people-boycott-lok-sabha-election-for-oppose-to-parandur-airport-project-4495303
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்ததால், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு அன்று அந்த கிராம வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் 72.09%-ஐத் தாண்டி வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவைப் புறக்கணித்ததால் ஏகனாபுரம் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படஉள்ளது. இதற்காக, அரசு 5,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள், பொதுமக்களின் குடியிருப்புகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட சில கிராம மக்கள்பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மக்களின் போராட்டம் 625 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அரசு தரப்பில், இவர்கள் போராட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஏகனாபுரம் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். தபால் வாக்குகள் பெற வந்த அதிகாரிகளையும் திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டாலும், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த ஏகனாபுரம் கிராம மக்கள், வாக்களிக்க யாரும் வரவில்லை. இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், 1400 வாக்காளர்கள் உள்ள ஏகனாபுரம் கிராமத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அரசு ஊழியர்கள் அளித்த வாக்குகள் உள்பட 21 வாக்க்கள் மட்டுமே அங்கு பதிவாகியுள்ளது. மக்கள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு வாக்களிக்கும்படி தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.