சனி, 20 ஏப்ரல், 2024

தமிழக வாக்கு சதவீதம் 72-ஐ தாண்டியது: தருமபுரி, கள்ளக்குறிச்சி தொகுதிகள் 'டாப்'

 தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவைடந்த நிலையில், தமிழகத்தில் 72.09% வாக்குகளைத் தாண்டி பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில், 81.40%, கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகள் பதிவாகி டாப்பில் உள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி 1 தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகளும், தருமபுரியில் 75.44% பதிவானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மேலும், இதையடுத்து, தமிழ்நாட்டில் கடைசி 1 மணி நேரத்தில் மட்டும் 10% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.40% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியானது.

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:

தருமபுரி - 81.40%

கள்ளக்குறிச்சி - 75.67%

சிதம்பரம் - 74.87%

பெரம்பலூர் - 74.46%

நாமக்கல் - 74.29%

கரூர் - 74.05%

அரக்கோணம் - 73.92%

ஆரணி - 73.77%

சேலம் - 73.55%

விழுப்புரம் - 73.49%

திருவண்ணாமலை - 73.35%

வேலூர் -73.04%

காஞ்சிபுரம் - 72.99%

கிருஷ்ணகிரி - 72.96%

கடலூர் - 72.40%

விருதுநகர் - 72.29%

பொள்ளாச்சி - 72.22%

நாகப்பட்டினம் - 72.21%

திருப்பூர் - 72.02%

திருவள்ளூர் - 71.87%

தேனி - 71.74%

மயிலாடுதுறை - 71.45%

ஈரோடு - 71.42%

திண்டுக்கல் - 71.37%

திருச்சி - 71.20%

கோயம்புத்தூர் - 71.17%

நீலகிரி - 71.07%

தென்காசி - 71.06%

சிவகங்கை - 71.05%

ராமநாதபுரம் - 71.05%

தூத்துக்குடி - 70.93%

திருநெல்வேலி - 70.46%

கன்னியாகுமரி - 70.15%

தஞ்சாவூர் - 69.82%

ஸ்ரீபெரும்பதூர் - 69.79%

வட சென்னை - 69.26%

மதுரை - 68.98%

தென் சென்னை - 67.82%

மத்திய சென்னை - 67.35%

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத்தொகுதியில் 81.40% வாக்குகளும் கள்ளக்குறிச்சிய்ல் 75.67% வாக்குகளும் பதிவாகி டாப்பில் உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், 67.37% வாக்குகள் பதிவாகி உள்ளன.



இதனிடையே, தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

“இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். எனவே வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் உயரும்.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீதமும், தர்மபுரியில் 75.44 சதவீதமும், சிதம்பரத்தில் 74.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

சென்னையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெயிலை தவிர்க்க மாலை 3 மணிக்கு பிறகு மக்கள் வந்து அதிகமாக வாக்களித்துள்ளனர். மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

இந்த எண்ணிக்கையில் தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. என்றாலும், முழுமையான வாக்குப்பதிவு அளவு நாளை (இன்று) காலை 11 மணிக்கு மேல் தெரிய வரும்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது அதிகபட்சமாக தருமபுரியில் 82.41 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.07 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.

மறு தேர்தல் நடத்துவது பற்றிய தகவல்கள் நாளைதான் தெரிய வரும். அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள். பின்னர் அதுபற்றி முடிவு செய்யப்படும். மறு தேர்தலுக்கு ஒரு கட்சி மட்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை பெறப்படும்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மிகவும் சுமுகமாகவும், அமைதியாகவும், பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சின்னச்சின்ன வாக்குவாதங்கள்தான் சில இடங்களில் நடந்தன. பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடும் நன்றாக இருந்தது. மிகக் குறைவான இடங்களில் மட்டும் மாற்று எந்திரங்கள் வைக்கப்பட்டன. சில இடங்களில் பழுது பார்த்து சரி செய்யப்பட்டன.

தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டது பற்றி சற்று ஆழமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதற்கான சூழ்நிலை எது என்பதை கண்டறிய வேண்டும். வாக்காளர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் நன்றாக ஒத்துழைத்தனர்.” என்று கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/lok-sabha-polls-tamil-nadu-voting-turnout-percentage-and-dharmapuri-kallakurichi-top-4495327