திங்கள், 22 ஏப்ரல், 2024

தூர்தர்ஷன் லோகோவை காவி நிறமாக மாற்றியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

தூர்தர்ஷன் லோகோவை காவி நிறமாக மாற்றியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து, தூர்தரஷன் சேனலின் லோகோ நிறm மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது:

“உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என்று கூறியுள்ளார். முன்னதாக இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, “நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் நேரத்தில், நம்முடைய தூர்தர்ஷன் லோகோவின் நிறம் மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நடவடிக்கை தார்மீகமற்றது, சட்டவிரோதமானது. இதன்மூலம், தேசிய அளவிலான பொது ஒளிபரப்பு நிறுவனம் (தூர்தர்ஷன்), பாஜகவுக்கு ஆதரவானதாக ஒருதலைபட்சமாக மாற்றப்படுவதை மேற்கண்ட நடவடிக்கை உரக்கச் சொல்கிறது. மக்கள் தேர்தல் மீது கவனம் செலுத்தி வரும் சூழலில், இத்தகைய கொடூர காவிமயமாக்கலை, தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல, மாநிலங்களவை உறுப்பினரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார், “தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க லோகோவை காவி நிறத்தில் மாற்றியிருப்பதை கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி” என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கவுரவ் திவேதி, தூர்தர்ஷன் லோகோவின் வண்ணத்தை பாஜகவுடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என்றும், அது காவி நிறமல்ல, ஆரஞ்சு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/chief-minister-m-k-stal-condemned-for-changing-doordarshan-logo-to-saffron.html#google_vignette