தமிழ்நாட்டில் எந்த மக்களவைத் தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பொதுப் பார்வையாளர்களும் வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்தும் இன்று (ஏப். 20) ஆய்வு மேற்கொள்வர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த ஆய்வின் அடிப்படையில், வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர்கள் பரிந்துரை செய்வர் என்றும் இந்த பரிந்துரைகளின்படி, மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று ஆய்வு நடந்த நிலையில், எந்தவொரு மக்களவை தொகுதியிலும், வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/there-is-no-re-voting-in-tamil-nadu-election-commission-informs.html