ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

குஜராத்தில் உலகின் பெரிய பாம்பின் படிமம் கண்டெடுப்பு!

 

47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அனகோண்டாவை விட பல மடங்கு பெரிய பாம்பின் படிமம் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 

உலகத்திலேயே மிகப்பெரிய பாம்பு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது அனகோண்டா. இந்த வகை பாம்புகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அனகோண்டாவை விட பெரிய பாம்பு டைட்டனோபோவா பாம்பினம் என ஆராய்ச்சியாளார்கள் கூறுகிறார்கள். டைட்டனோபோவா முன் அனகோண்டாவே ஒரு பூச்சிதான் என்கிறார்கள் ஆய்வாளார்கள்.

இந்த வகை டைட்டனோபோவா பூமியில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக அதன் புதைபடிமங்களை வைத்து ஆராய்சியாளார்கள் கூறிவந்தனர். இந்நிலையில்,  டைட்டனோபோவாவைவிடவும் மிகப்பெரியதான, பூமியில் சுமார் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Madtsoiidae என்ற இன பாம்பின் படிவம் ஒன்றை சமீபத்தில், ஐஐடி ரூர்க்கியில் உள்ள புவி அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படிவத்திலிருந்து 27 முதுகெலும்புகளை கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பாம்பிற்கு வாசுகி என்று பெயரிட்டுள்ளனர். ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த பேராசிரியர் சுனில் பாஜ்பாய் மற்றும் தேபாஜித் தத்தா ஆகியோர், தங்களின் X தளப்பதிவில் வாசுகி பாம்பினைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

அதன்படி இந்த வாசுகி பாம்பானது குஜராத் மாநிலத்தில் 47 மில்லியனுக்கு முன் வாழ்ந்ததாகவும், இதன் நீளம் சுமார் 15 மீட்டர் இருக்கும் எனவும், இதன் எடை குறைந்தது ஒரு டன் (1000 கிலோ) இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வகைப் பாம்பு பெரிய நிலப்பரப்பில் வாழக்கூடியது என்றும் இந்தவகை பாம்புகள் 100 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும், வாசுகி பாம்பை டைட்டனோபோவா பாம்புடன் ஒப்பிட்டு பார்க்கையில், வாசுகியின் முதுகெலும்பு டைட்டனோபோவா பாம்பின் முதுகெலும்புடன் சற்று சிறியவை என்ற தகவலையும் தந்துள்ளனர்.  இப்பொழுது இந்த பாம்பு வகை உயிருடன் இருந்திருந்தால் விஷமற்றதாக இருந்திருக்கக்கூடும் என்றும், மலைப்பாம்பினைப்போல் இறையை தனது உடலால் இறுக்கி முழுங்கக்கூடியது என்றும், சதுப்புநிலப்பகுதியில் வாழக்கூடிய வகை என்றும் கூறுகின்றனர்.


source https://news7tamil.live/47-million-year-old-snake-form-discovered-study-informs.html