சாம்ராஜ்நகர் தொகுதியில் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குப்பதிவு மையத்தை சூறையாடினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இண்டிகநட்டா கிராமத்தில் மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இண்டிகநாட்டா, மெண்டரே, துலசிகரே, தெக்கானே, படசலனதா ஆகிய கிராமங்களுக்கு குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தராததால் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வரை வாக்கு பதிவு செய்ய யாரும் வராததால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அங்குள்ள மலை கிராம மக்கள் சிலரை சமாதானம் செய்து வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். ஒன்பது பேர் வாக்களித்த நிலையில் இதனை கண்டித்து கிராம மக்கள் பலரும் வாக்குப்பதிவு மையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குச்சாவடி மையத்தின் மீது கற்களை வீசி தாக்கியும், வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்று அங்கு இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியும், வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு காயமடைந்த அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
source https://news7tamil.live/boycott-of-elections-in-samrajnagar-constituency-people-who-smashed-the-polling-station.html