ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

கே.கரிசல்குளம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? – விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்!

 

தென்காசி கே.கரிசல்குளம் மக்கள் தேர்தலை புறக்கணித்த காரணம் குறித்தும், மறுதேர்தல் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (ஏப். 19) நடைபெற்ற வாக்குப்பதிவில் 67.70% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், எந்த விதமான அசம்பாவிதங்கள் இன்றி தேர்தலானது தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பேசி அவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.கரிசல்குளம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் சாலை வசதிகள் கோரியும்,  டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் கோரிக்கை விடுத்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் சில பொதுமக்கள் வாக்களித்துள்ள நிலையில்,  இதுபோன்ற பிரச்னைகளுக்காக கே.கரிசல் குளம் பகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான சாத்தியகூறு இல்லை எனவும், தேர்தல் முடிந்த பிறகு அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அந்த பகுதி மக்களின் பிரதான கோரிக்கையான சாலை வசதி அமைப்பதற்கு முன்னதாகவே பிரதம மந்திரியின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் அனுமதி கிடைத்துள்ள நிலையில், தேர்தல் காரணமாக சாலையானது அமைக்கப்படாமல் இருந்தது எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு அந்த சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் கால்நடைத் துறையினர் முறையான சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

source https://news7tamil.live/q-what-is-the-reason-why-the-people-of-karisalkulam-area-boycotted-the-election-what-is-their-demand-the-district-collector-explained.html#google_vignette