திங்கள், 29 ஏப்ரல், 2024

தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு!

 

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளதால்,  தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது.  கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.  கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் பல மளிகை பொருள்களின் விலை ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயா்ந்துள்ளது.

இதனிடையே தமிழ்நாடு மற்றும் பிற மாநிவங்களில் கனமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  மளிகை பொருள்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளது.

இந்த நிலையில்,  கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது கிலோ ரூ. 160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ. 222-க்கும்,  ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுத்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும்,  ரூ.160- க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும்,  ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேநேரத்தில் சீரகம்,  சோம்பு,  மிளகாய் தூள்,  மல்லித் தூள் ஆகிய பொருள்களின் விலை சற்று குறைந்துள்ளது.  சமையல் எண்ணெய் விலையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.  இனி வரும் நாட்களில் பருப்புகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



source https://news7tamil.live/the-price-of-groceries-in-tamil-nadu-has-increased-sharply.html