காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் இன்று (16-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வேட்பாளர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவையும், காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வத்தையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையின் விபரம் வருமாறு:
திருப்பெரும்புதூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். பாலுவை உங்களுக்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. 1986 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்! 17 வயதில் தீவிர அரசியலுக்குள் நுழைந்து, இன்று வரை, ஒரே கொடி! ஒரே இயக்கம்! ஒரே தலைமை! என்று பாதை மாறாத பயணமாகத் தனது கொள்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டவர். மூன்று முறை ஒன்றிய அமைச்சராகப் பதவியேற்று 12 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் சாதனைகளைச் சொல்ல எனக்கு நேரம் போதாது, அதை அவரே புத்தகமாகப் போட்டிருக்கிறார். அத்தகைய பாலுவை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது உங்கள் கடமை! நண்பர் டி.ஆர்.பாலுவுக்குத் திருப்பெரும்புதூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு, திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளராகச் செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், இளைஞரணி உட்பட கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டு தன்னுடைய உழைப்பாலும் மக்கள் தொண்டாலும் உங்களது உள்ளங்களில் இடம்பிடித்திருக்கிறார். மிகவும் அமைதியான குணமுடையவர்! எல்லாவற்றிற்கும் மேல் மக்களிடம் நற்பெயர் பெற்றவர். இவரை மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்க காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்.
இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடம் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப்பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும், ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தை நான் மேற்கொண்டேன். இதே கரசங்கால் பகுதியில் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். அந்தக் கூட்ட மேடையில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, அதில் மக்களது கோரிக்கைகளைப் பெற்றேன். “ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், உங்கள் மனுக்களுக்கு தீர்வு காண்பேன்” என வாக்குறுதி கொடுத்தேன். ஆட்சிக்கு வந்த உடனே இதற்காகவே தனித்துறையை உருவாக்கி, கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்திக் காட்டிய நெஞ்சுறுதியுடன் உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன்.
அந்த பணியை முடித்தவுடன் நிற்கவில்லை, ’முதல்வரின் முகவரி’ என்ற பெயரில், கோட்டைக்கு எனக்கு வரும் மனுக்களுக்குத் தீர்வுகாண தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சேவைகளை ஒரு குடையின்கீழ் கொடுக்கும் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி காட்டினோம்.
நமது திமுக அரசின் கொள்கை ‘எல்லார்க்கும் எல்லாம்’ – ‘அனைத்து மாவட்டங்களுக்குமான சீரான வளர்ச்சி’. இதனால்தான், நான் ஆட்சிக்கு வந்தவுடன் கூறினேன். ”இது தனிப்பட்ட ஸ்டாலினின் ஆட்சி இல்லை, ஓர் இனத்தின் ஆட்சி”என்று பெருமையோடு சொன்னேன்.
ஒவ்வொரு தனிமனிதரின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்த்துப் பார்த்து அவங்களின் தேவைகளை நிறைவேற்றித் தரப் பாடுபடுகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனை திட்டங்கள்! இந்தியாவே பாராட்டுகிறது! இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நமது திட்டங்களைப் பின்தொடர்கிறது! 2021 தேர்தல் அறிக்கையில், கூறிய திட்டங்கள் மட்டுமல்ல; சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியவன்தான் இதோ உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
ஆட்சிக்கு வந்தவுடன் தொழில்வளத்தைப் பெருக்க, தொழில் முனைவோர்களுடன் கூட்டம் நடத்தினேன். அதில் அவர்கள் கேட்டுக்கொண்டது, நம்முடைய இளைஞர்கள் வேலை பெற, திறன்பயிற்சி தேவை என்று சொன்னவுடன், அதற்கான திட்டத்தை உருவாக்க ஆணையிட்டேன். அப்படி உருவாக்கிய திட்டம்தான், ’நான் முதல்வன் திட்டம்!’ அந்த திட்டத்தின் மூலம், இதுவரை 28 இலட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி இருக்கிறோம்.
திட்டத்தைச் செயல்படுத்துவது மட்டுமல்ல, அந்தத் திட்டம் எப்படி சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு, அந்த திறன்பயிற்சி எடுத்த இளைஞர்களின் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினேன். அந்தக் கூட்டத்தில், பேசிய ஒரு மாணவி கூறினார்கள், ”இந்த நான் முதல்வன் திட்டத்தால், எனக்கு எல்லாத் துறைகளைச் சார்ந்தும், படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது! அதனால் முதல் இண்டர்வியூ-இல் ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில், அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது”என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்.
இன்னொரு மாணவர் கூறினார், “இன்றைக்கு நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி, எங்களுக்குப் பயிற்சி வேண்டும்! வசதி இருக்கின்றவர்களால் வெளியே நிறைய பணம் செலவு செய்து கோச்சிங் கிளாஸ் – டிரெயினிங் செண்டர் என்று சென்று படிக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்குவது இந்த நான் முதல்வன் திட்டம் எங்கள் கனவுகளுக்கான வாசல்களைத் திறந்து விடுகிறது”என்று பூரிப்போடு சொன்னார். அதனால்தான், இந்த நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கியபோது, என்னுடைய கனவுத்திட்டம் என்று சொன்னேன். இப்போது நம்முடைய கனவுகளை நனவாக்கும் திட்டமாக மாறி இருக்கிறது! இதைத் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை!
இதே போன்று, இன்னொரு புரட்சிகரத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! அதற்கும் நான் எதிர்கொண்ட அனுபவம்தான் காரணம்! சென்னையில், ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்ட்டீங்களா”என்று எதார்த்தமாகக் கேட்டேன். அதற்கு அந்தக் குழந்தை ”வீட்டில் அப்பா – அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய மாட்டார்கள், அதனால் சாப்பிடவில்லை”என்று சொன்னதும், அதிகாரிகளை அழைத்தேன்.
”பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் கொண்டு வரவேண்டும்! திட்டத்தைத் தயார் செய்யுங்கள்” என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, ”சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், இது நம்முடைய தேர்தல் அறிக்கையில் கூட சொல்லவில்லை” என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன். “வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்காலத் தலைமுறை குழந்தைகள்தான்! அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு, நல்ல உடல்நலத்தோடு இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும்! இதை நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும். நிதிநிலை சரிசெய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் ஃபைலைத் தயார் செய்யுங்கள்”என்று உத்தரவு போட்டேன். இந்த ஸ்டாலின் போட்ட கையெழுத்தால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள்.
அடுத்த சாதனைத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்! தாய்மார்கள் இன்றைக்கு நமக்கு இவ்வளவு ஆதரவு தரக் காரணமான திட்டம்! தொலைக்காட்சியில் சகோதரி ஒருவர் பேசும் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் அந்தச் சகோதரி சொல்கிறார். ”வீட்டில் அத்தனை வேலையும் செய்வோம். ஆனால், வெளியில் யாராவது எங்களைப் பற்றி வீட்டுக்காரரிடம் கேட்டால், அவர், நான் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்’என்று கூறுவார்! என்னதான் வேலை செய்தாலும், என்னுடைய சேமிப்பில் ஒன்றும் இருக்காது. ஆத்திர அவசரத்திற்கு ஒரு ரூபாய் இருக்காது. வீட்டுக்காரரிடம் கேட்கவும் தோன்றாது! ஆனால், இன்றைக்கு ஸ்டாலின் அண்ணன் தரும் ஆயிரம் ரூபாய், என்னுடைய சுயமரியாதைக்குக் கொடுக்கும் அங்கீகாரம்’என்று கண்ணில் நம்பிக்கையுடன் கூறிய அந்தத் தாய்மார் போன்று, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள், ’எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் தாய்வீட்டுச் சீர்’ மாதம் ஆயிரம் ரூபாய் என்று உரிமையோடு சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
அதுமட்டுமல்ல, நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, “மகளிர் சுதந்திரமாக, ஸ்டாலின் அய்யா பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறோம்” என்று சொல்லும், விடியல் பயணத் திட்டம்!
அதேபோன்று, ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம்! பெண் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்கு வரும் என்னுடைய 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மகள்களுக்கு ஆயிரம் ரூபாய் தரும், ’புதுமைப் பெண் திட்டம்’!
மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டம்!
வெளியூரில் வேலைக்குப் போகும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’ திட்டம்!
ஒரு கோடி பேருக்கும் மேல் பயனடைந்திருக்கும் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்!
2 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி அவர்கள் குடும்பங்களையும் காப்பாற்றி இருக்கும் ’இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம்!
இன்னும் சொல்லலாம்! நிறைய இருக்கிறது! அதற்குப்பிறகு, இது சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்! எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு நன்மை செய்யவது மட்டும்தான், நம்முடைய ஒரே குறிக்கோள்! இப்படி பார்த்துப் பார்த்து, தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால், பழனிசாமி என்ன கேட்கிறார்? ’நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கினேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா’என்று கேட்கிறார். பழனிசாமி அவர்களே…! உங்களுக்கு அவர்கள் கொடுத்த அவார்டு எதற்கு தெரியுமா? படத்தில் ஒரு டைலாக் வருமே, ’நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்’என்று அதற்கு ஏற்ற மாதிரி, நீங்கள் இருக்கிறீர்கள் என்று பி.ஜே.பி. அரசு உங்களுக்கு விருது கொடுத்திருக்கும்!
நாங்கள் மக்களிடம் விருது வாங்கி இருக்கிறோம் பழனிசாமி அவர்களே… கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெறுகிறோமே! அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய விருது! இன்னொரு விருது காத்திருக்கிறது! ஜூன் 4-ஆம் தேதி ”நாற்பதுக்கு நாப்பது”என்ற விருது.
பழனிசாமி அவர்களே! wait and see! நீங்கள் பாழ்படுத்திய நிர்வாகத்தைச் சரிசெய்து தி.மு.க. அரசு, தமிழ்நாட்டை ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தமிழ்நாடு எதில் எல்லாம் நம்பர் ஒன் தெரியுமா? பட்டுக்கும் – நெசவுக்கும் பெயர் போன காஞ்சி மண்ணில் சொல்கிறேன். ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ தோல் பொருட்கள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ஏற்றுமதி ஆயத்தநிலைக் குறியீட்டில் ’நம்பர் ஒன்!’ எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் ’நம்பர் ஒன்!’ கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில், ’நம்பர் ஒன்!’ மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பில், ’நம்பர் ஒன்!’ 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், ’நம்பர் ஒன்!’ இப்போது நான் சொன்னது எல்லாம் நாங்கள் எடுத்த புள்ளிவிவரம் இல்லை, மத்திய அரசின் புள்ளிவிவரம்!
பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14- வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம். அன்பரசன் இருக்கிறார். அவரது துறையில், ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாட்டை நம்முடைய ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், LEADER ஆக்கி இப்போது முதலிடத்தையும் பிடித்துவிட்டோம்.
எந்த சமூக – பொருளாதாரக் குறியீட்டை எடுத்துப் பார்த்தாலும், அதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத்தான் இருக்கும்! பழனிசாமி அவர்களே! நீங்கள் எதில் ’நம்பர் ஒன்’ தெரியுமா? பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டு உரிமைகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்தீர்களே, அதில் மட்டும்தான் ’நம்பர் ஒன்!’ எப்படியெல்லாம் பிரதமர் மோடிக்கு – மத்திய அமைச்சர்களுக்கு – பா.ஜ.க.வுக்கு லாவணி பாடினீர்கள்! ‘மோடிதான் எங்கள் டாடி’என்று சொன்னீர்களே!
அதுமட்டுமல்ல, பா.ஜ.க. இங்கு, இந்தியைத் திணித்தபோது நாம் எதிர்த்தோம். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர் என்ன சொன்னார்? அண்ணா மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார் என்று பச்சைப்பொய்களைப் பேசவைத்து அழகு பார்த்த பச்சோந்திதான், இந்தப் பழனிசாமி! அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் இயற்கைக் கூட்டணி என்று சொல்லி, செண்டிமெண்ட் மழை பொழிந்தவர்கள்தான் பழனிசாமி நாடக கம்பெனி!
இப்போது பிரிந்தது போன்று நாடகம் போடும் பழனிசாமி, இன்றைக்கு ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஒருவேளை, அ.தி.மு.க சில இடங்களில் வென்று பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா? என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒப்புக்காகக் கூட “ஆதரிக்க மாட்டோம்”என்று பழனிசாமி பதில் சொல்லவில்லை. “பொறுத்திருந்து பாருங்கள்”என்று வாய்தா வாங்கியிருக்கிறார் பழனிசாமி! இதுதான் அவரின் பா.ஜ.க. எதிர்ப்பு லட்சணம்!
எங்கேயாவது “பா.ஜ.க. எங்கள் கொள்கை எதிரி” என்று பழனிசாமி சொல்லியிருக்கிறாரா? பா.ஜ.க.வை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று ஏன் அவரால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை! ஏன் என்றால், பழனிசாமியால் ஒருபோதும் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது என்பதே உண்மை! அ.தி.மு.க.வுக்குப் போடும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான்! பழனிசாமியின் பகல் வேஷங்களும் – பச்சைப்பொய்களும் இனி தமிழ்நாட்டு மக்களிடம் எப்போதும் எடுபடாது! இப்போது, நாட்டு மக்கள் இந்தியாவின் எதிர்காலம் இந்தியா கூட்டணியின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கையில், இருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது! மக்களிடம் இருந்து, மக்களுக்காகப் பணியாற்றிப் பெற்றுள்ள நம்பிக்கை இது! தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்தியில் எத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறோம்! பெரிய பட்டியலே இருக்கிறது!
உதாரணத்திற்கு நம்முடைய டி.ஆர்.பாலு , மூன்று முக்கியமான துறைகளில் மத்தியில் அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை மட்டும் சொல்லலாமா?
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பாலு இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு மட்டுமே 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். கப்பல் – தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தன.
இதுமட்டுமா! கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், பாடி பாலம்! அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே, 335 பாலங்களைக் கட்டி சாதனை செய்து இருக்கிறோம். அதனால்தான், தலைவர் கருணாநிதி ’பாலம்’ பாலு என்று அழைத்தார். இதுபோன்ற சாதனைகள் தொடர, மத்தியில் நாம் ஆட்சியில் இருக்கவேண்டும். அதற்காகத்தான், இந்த தேர்தலின் ஹீராவான தேர்தல் அறிக்கையை தி.மு.க.வும் – காங்கிரசும் வெளியிட்டிருக்கிறோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது. அதில், முக்கியமான சில வாக்குறுதிகளை மட்டும் சொல்கிறேன்.
- ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்!
- பெண்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு!
- நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!
- மத்தியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்த சட்டத்திருத்தம்!
- SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு!
- SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!
- ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு பதிலாகப் புதிய சட்டம்!
- விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது!
- பொதுப்பட்டியலில் இருக்கும் அதிகாரங்கள், மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு!
- விவசாயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம்!
- இப்படி மாநிலங்களுக்கும் – நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. அதேபோல், தி.மு.க.வின் வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
- திருப்பெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரை ஆறுவழிச் சாலையாக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்!
- அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்குக் காஞ்சிபுரம் வழியாக செல்லும் ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும்!
- செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி உற்பத்தி தொடங்க உரிய நடவடிக்கை!
- பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
- சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!
- தொழிலாளர் விரோதச் சட்டங்களும் – ஜி.எஸ்.டி. சட்டமும் சீர்திருத்தம் செய்யப்படும்!
- விவசாயிகள் கடன் தள்ளுபடி!
- மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி!
- மக்களைச் சுரண்டும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!
- வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி ஏழைகளிடமிருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பறித்த அவலநிலையைப் போக்க, அபராதம் விதிக்கும் முறை நீக்கப்படும்!
இப்படி நாம் நம்முடைய வாக்குறுதிகளையும் சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் முன்வைத்து, ஆதரவு கேட்கிறோம்! வாக்கு கேட்கிறோம்!
ஆனால், மிக உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு, பிரதமர் மோடி எல்லாக் கூட்டங்களிலும் மிகவும் மலிவான – பிரிவினைவாத அரசியலை செய்துகொண்டு இருக்கிறார். சாதி – மதம் – உணவு என்று மக்களை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்றுதான், மோடியின் மூளை சதாசர்வ காலமும் சிந்திக்கிறது.
இப்படி மக்களைப் பிளவுப்படுத்தச் சிந்திப்பதில் ஒரு விழுக்காடாவது மக்களுக்கு நல்லது செய்ய சிந்தித்து இருக்கிறாரா! மோடி? சிந்தித்து இருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா? வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கும். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில், எல்லாத் தரப்பு மக்களுக்கும் போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டதே! தனிமனிதர்கள் தொடங்கி மாநிலங்கள் வரை, எல்லோரையும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் கூட போராட வைத்திருக்கிறார்.
12 ஆண்டுகாலம் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்குப் பிரதமர் ஆனதும், மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. பிரதமர் ஆனவுடன் என்ன சொன்னார்? “மாநில முதலமைச்சராக இருந்ததால், எனக்கு மாநிலங்களின் பிரச்சினையும் தெரியும்! தேசத்தின் பிரச்சினையும் தெரியும்!”என்று சொன்னார். ஆனால், என்ன செய்கிறார்? ஆளுநர்களை வைத்து, மாநிலங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையைக் கொடுப்பதே மோடிதான்! ஒட்டுமொத்த தேசத்திற்கும், பிரதமர் மோடிதான் மிகப்பெரிய பிரச்சினை!
“பேச நா இரண்டுடையாய் போற்றி”என்று பேரறிஞர் அண்ணா சொல்லுவாரே! அதற்கு ‘வாழும் உதாரணம்’ மோடிதான்! பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பே இருக்காது. ‘நாரி சக்தி’என்று பெண்களை மதிப்பதாக வீரவசனம் எல்லாம் பேசுவார். மகளிருக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை! மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மனச்சாட்சி இருக்கும் யாரும் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள்! அந்த பெண்களுக்கான நீதி எங்கே? குஜராத் வன்முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு போராடிப் பெற்ற நீதியைக் கூட, குற்றவாளிகளின் விடுதலை மூலமாகக் கொச்சைப்படுத்தியது தான் பா.ஜ.க! காஷ்மீரில் கோயிலுக்குள்ளேயே குழந்தை ஆசிபாவை சீரழித்து கொன்றுவிட்டு அந்த குற்றவாளிக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற கேடுகெட்ட கொடியவர்கள் இருக்கும் கட்சிதான் பா.ஜ.க.!
நாட்டுக்கு பெருமைதேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளி உலகத்திற்குச் சொல்லி, நியாயம் கேட்டபோதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றியதுதான் பா.ஜ.க. இதுதான் ‘நாரி சக்தி’ என்ற முகமூடிக்குப் பின்னால் இருக்கும் உண்மை முகம்!
ஆனால், நம்முடைய திமுக ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் ஓதுவார்கள் ஆகியிருக்கிறார்கள். அர்ச்சகர்கள் ஆகியிருக்கிறார்கள். அதற்கு ஒரு படி மேல் போய், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயிலான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜனை நியமித்திருக்கிறோம். இப்படி முற்போக்குச் சிந்தனைகளோடு முன்னேறிக்கொண்டு இருப்பதை பார்த்தால் அவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும்.
பிரதமர் ஆனதும் மாநிலங்களை சுத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு, மறைமுகமாக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டியவர்தான் மோடி! இதை இந்தத் தனிப்பட்ட ஸ்டாலின் சொல்லவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் சொல்லவில்லை. மோடி அரசில் நிதி ஆயோக் தலைமை அதிகாரியாக இருக்கும் B.V.R. சுப்பிரமணியமே சில மாதங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தினாரே! மோடி பிரதமர் ஆனதும், மாநிலங்களுக்குப் போகும் நிதியை எப்படி குறைக்கலாம், அதை மத்திய அரசு எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று, மோடி சதித்திட்டம் தீட்டியதாக அவர் சொல்லியிருக்கிறார். இதுதான் மாநிலங்கள் மேல் மோடிக்கு இருக்கும் போலி பாசம்!
அடுத்து ஒன்று சொன்னார்! ’டெல்லியில் இருக்கின்றவர்கள், மாநிலங்களை ஆளக்கூடாது என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு எல்லா அதிகாரங்களையும் டெல்லியில் மத்திய அரசிடம் குவித்து, மாநில அரசுகளை நகராட்சிகளாக மாற்ற முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். வரி விதிக்கும் அதிகாரம், மாநில அரசுகளிடம் இல்லை!
இதையெல்லாம் விட மோசமான செயல், அதிகாரிகளை நியமிக்க, டிரான்ஸ்பர் செய்யக் கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அதைத்தான் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகச் செய்தார். அரசு உயரதிகாரிகள் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதும், அதை எதிர்த்து, “டெல்லி சர்வீசஸ் பில்” கொண்டு வந்தார். மாநில அரசின் முக்கிய அதிகாரங்களைத் துணைநிலை ஆளுநர் என்ற நியமனப் பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்.
அதுமட்டுமா! பிரதமர் ஆவதற்கு முன்பு, “மாநிலங்களைப் பழிவாங்க மாட்டேன்”என்று சொன்னார் மோடி. ஆனால், நாட்டில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட்டணி முயற்சி எடுப்பார். முடியவில்லை என்றால், அந்தக் கட்சிகளை உடைக்கப் பார்ப்பார். அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்குவார். தன்னுடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பணியாத முதலமைச்சர்கள் மேல், சகட்டுமேனிக்கு ஊழல் குற்றச்சாட்டு வைப்பார். CBI, IT, ED போன்ற அமைப்புகளை வைத்து, தொல்லை செய்வார். அப்போதும் அவர்கள் உறுதியாக நின்றால், அவர்களைக் கைது செய்து பழிவாங்குவதில் மும்முரமாக இருக்கிறார்.
மோடியின் ஊழலுக்கு பணிந்துவிட்டால், உடனே, “மேட் இன் பி.ஜே.பி.” வாஷிங் மெஷினை எடுத்து வெளுத்து சுத்தமாக்கி, உலக யோக்கியர் என்று பட்டம் கொடுப்பார். இந்த லட்சணத்தில், மாநிலங்கள் மேல் அக்கறை இருப்பது போன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்!
இதே காஞ்சிபுரமும், சென்னையும் கடந்த டிசம்பரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது, அதற்கு ஒரு ரூபாயாவது மத்திய அரசு நிவாரணமாகத் தந்ததா? நானே நேரில் சென்று, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். “இதோ தருகிறேன்”என்று சொன்னார். தமிழ்நாட்டு எம்.பிக்கள் எல்லாம், டி.ஆர். பாலு தலைமையில் உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்கள்! அவரும், “இதோ தருகிறேன்”என்று சொன்னார். ஆனால், இன்று வரை நிதியைத் தரவில்லை! மாநில முதலமைச்சரான என்னிடமே, பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி. இப்போது நாங்கள் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறோம். இனியும் மாநில உரிமைகள் பற்றியோ, கூட்டுறவுக் கூட்டாட்சி பற்றியோ, பிரதமர் மோடி பேசலாமா? அவருக்கு அதற்கான தார்மீக உரிமை இருக்கிறதா?
நாங்கள் மட்டும் இல்லை, வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் வாங்க அனுமதிக்கவேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றப் படி ஏறி இருக்கிறது. வறட்சி நிவாரணம் கேட்டு கர்நாடகம் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்தையும் நீதிக்காகவும் – நிதிக்காகவும் நீதிமன்றப் படி ஏற வைத்தவர்தான் பிரதமர் மோடி!
அதனால்தான் சொன்னேன்! மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! பிறகு மக்கள் எப்படி நம்புவார்கள்? இப்போது புதிதாகப் பேட்டி என்ற பெயரில் ரீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார். நேற்று கொடுத்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி சொல்கிறார். தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். இதைக் கேட்டுச் சிரிப்பதா! இல்லை, பிரதமரின் பகல்கனவை நினைத்து அவர் மேல் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. பிரதமர் அவர்களே! இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வளரவே முடியாது.
நாடு முழுவதும் பா.ஜ.க. ஜெயித்த 2014, 2019 தேர்தலிலே பா.ஜ.க.வை ஓரங்கட்டிய தமிழ்நாட்டு மக்கள், நாடு முழுவதும் நீங்கள் தோற்பது உறுதியாகி இருக்கும் இந்தத் தேர்தலில் உங்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள்? பத்தாண்டுகளாக ஒன்றியத்தில் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேச்சில், வாயில்தான் பாஜக வளர்கிறதே தவிர, களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அதனால்தான் கூட்டணிக்கு உங்கள் கட்சியில் ரவுடிகளையும் கலவரம் செய்யும் எக்ஸ்பெர்ட்-களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் பாஜக எப்படி வளரும்? நீங்கள்தான் எப்போதும் மக்களை ஏமாற்றுவீர்கள் என்று பார்த்தால், இப்போது உங்களையே யாரோ தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என ஏமாற்றுகிறார்கள்.
அடுத்து இன்னொரு பொய்யைச் சிரிக்காமல் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி! காசி தமிழ் சங்கமத்தில் உத்தர பிரதேசம் சென்ற நம்முடைய மக்கள், அங்கு நடந்திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்களாம். அதற்கு யாரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நாம் நாளிதழ்களில் படித்து ஆதங்கப்பட்டது… உ.பி முதலமைச்சர் யோகியின் சொந்தத் தொகுதியான கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், 60 குழந்தைகள் இறந்ததன. மனித வளக் குறியீடு, ஊட்டச்சத்து, சட்டம் – ஒழுங்கு, தனிநபர் வருமானம் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் இடம் என்ன? பா.ஜ.க. ஆட்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலை என்ன? இதெல்லாம் எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் உங்கள் மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கு எடுபடாது.
பத்தாண்டுகளாக நாட்டை பாழ்படுத்திய நிலை இனியும் தொடரக் கூடாது. “வேண்டாம் மோடி”என்று ஒட்டுமொத்த நாடும் உரக்கச் சொல்வதற்கான நாள் நெருங்கிவிட்டது! இன்னும் ஒருமுறை இந்த நாடு ஏமாந்தால், இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்! வரலாறுகள் திரித்து எழுதப்படும்! அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிற்போக்குக் கதைகள் புகுத்தப்படும்! மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படும்! மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்! சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்படும்! புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் சட்டம் நாட்டை ஆளும்! இதையெல்லாம் தடுக்கும் வலிமையான ஆயுதம், மக்களான உங்களுடைய வாக்குகள்தான்! இன்றை விட்டுவிட்டு நாளை புலம்புவது நல்லவர்களுக்கு அழகல்ல! நாடு காக்க இன்றே தயாராகுங்கள்!
பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு! அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு! எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்துங்கள். “பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது! ஜனநாயகமும் – சமத்துவமும் – சகோதரத்துவமும் வென்றது!” என்ற புதிய வரலாறு எழுத, திருபெரும்புதூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜி.செல்வத்துக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
source https://news7tamil.live/a-vote-for-aiadmk-is-a-vote-for-bjp-chief-minister-m-k-stalin.html