செவ்வாய், 23 ஏப்ரல், 2024

விண்ணப்பித்து பல நாட்களாகியும் உம்ரா பயணத்திற்கு விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

 22 4 24 

விண்ணப்பித்து பல நாட்களாகியும் உம்ரா பயணத்திற்கு விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில்கொண்டு சவூதி மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளின் ஒன்றுதான் ஹஜ் எனும் புனித பயணமாகும். இது ஓரளவுக்கு பொருளாதார வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ள இஸ்லாமியர்களுக்கு கட்டாயக் கடமையாகும். ஹஜ் என்பது இஸ்லாமிய காலண்டரின் 12வது மாதத்தில் நிறைவேற்றப்படும் ஒரு புனித பயணமாகும்.

இறைத்தூதர் இப்றாஹிமின் தியாகத்தை போற்றும் வகையில் அதனை நினைவுகூறும் விதமாக முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக ஹஜ் பயணம்  மேற்கொள்ளாதவர்கள் இங்கேயே இருந்து ஆடுகளை வளர்த்த் அதனை இறைவனுக்காக குர்பானி கொடுத்து ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.  ஹஜ்ஜுக்கு செல்ல முடியாதோர் அந்த குறிப்பிட்ட மாதம் தவிர்த்து பிற மாதங்களில் செல்லும் பயணம் உம்ரா என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் உம்ரா பயணத்திற்கு செல்வதற்கு சவூதி அரசிடம் உம்ரா விசா விண்ணப்பித்து அதன்பின்னர்தான் செல்ல முடியும். இதுவரை எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து உம்ரா பயணம் நடைபெற்று வந்த நிலையில் இந்த வருடம் உம்ரா பயணத்தில் மிகப்பெரிய  சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

உம்ரா விசாக்களை பெரிய அளவில் தனியார் நிறுவனங்களே விண்ணப்பித்து தருகின்றன. முன்னதாக அவர்கள் சவூதிக்கு செல்ல  குறித்த தேதியில் டிக்கெட் முன்பதிவு செய்வர். பயணச்சீட்டு உறுதியான பின்னர் பிறகு விசா விண்ணப்பிப்பர். விசா உடனடியாக
கிடைத்துவிடும் எனவே குறித்த நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம் அதில் எந்த இடையூரும் இருந்ததில்லை. இப்படித்தான் இதுவரை நடைமுறை இருந்து வந்தது.

இந்த நிலையில் ரம்ஜான் முடிந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உம்ரா பயணம்
மேற்கொள்ள தயாராக இருந்தனர்.  அவர்களுக்கான விமான பயணச்சீட்டு ஒரு மாதத்திற்கு முன்பே ஏஜென்சி மூலம் முன்பதிவு செய்துவிட்டனர். சவுதி அரசாங்கத்தில் விசா விண்ணப்பித்து காத்திருந்த நிலையில் இதுவரை விசா உறுதி செய்யப்படவில்லை

பல்லாயிரக்கணக்கான மக்கள்  விசா விண்ணப்பித்திறந்த நிலையில் சிலருக்கு மட்டுமே விசா கிடைத்துள்ளது.  ஒரு குடும்பத்தில் 4 பேர் விசா விண்ணப்பித்திருந்தால் அதில்
2 பேருக்கு மட்டுமே விசா உறுதி ஆகி உள்ளது.‌ விமான பயணச்சீட்டுகள் அனைத்தும் உறுதியான  நிலையில் விசா கிடைக்காததால் பயணம் மேற்கொள்ளாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

விசா கிடைக்காத காரணத்தால் பயணம் மேற்கொள்ளாத ஒரு சூழல் ஏற்பட்டால் அனைத்து பயணச்சீட்டுகளும் ரத்தாகிவிடும் அப்படி ஆகும் பட்சத்தில் அனைவருக்கும் பணம் திரும்ப கிடைக்கப் பெறாது. ஒரு பயணச்சிட்டின் விலை 46 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்கும் செலவு உள்ளிட்டவை அனைத்தும் சேர்த்து ஒரு நபருக்கு 1 லட்சம் வரை செலவாகும்.

இதுகுறித்து உம்ரா ஏஜென்சி ஆப்பரேட்டர் முகமது ஷாஜகான் கூறுகையில்..

”இது எங்களுக்கு ஒரு துயரமான நேரம். 30 வருடங்களாக ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களுக்கு டிக்கெட் விசா முன்பதிவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பயணச்சீட்டை முன்பதிவு செய்வோம் அது உறுதியாகிவிடும் பின்னர் விசா முன்பதிவு
செய்வோம் அது உடனடியாக உறுதியாகிவிடும். ஆனால் இந்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்குப் பிறகு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உம்ரா பயணம் விசாக்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரசும் இந்திய அரசும் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்திற்கும் நபரான  சாகுல் ஹமீத் கூறுகையில்..

” நான் மண்ணடி பகுதியில் வசித்து வருகிறேன். உம்ரா பயணத்திற்காக ஒரு மாதத்திற்கு
முன்பு நான் விண்ணப்பித்திருந்தேன் பயண சீட்டுகள் உறுதியாக விட்டன. என் குடும்பத்தில் உள்ள ஏழு பேருக்கு 5 லட்சத்திற்கும் மேலாக ஏஜென்சியிடம் கொடுத்து விட்டேன். இப்பொழுது விசா கிடைக்கவில்லை என சொல்கிறார்கள். ஏதாவது முன் அறிவிப்பு இருந்திருந்தால் நாங்கள் உம்ரா பயணத்திற்கு
விண்ணப்பித்திருக்க மாட்டோம்.

இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது விசா கிடைக்க வேண்டும் அப்படி இல்லை
என்றால் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். வேறு ஒரு நாளில் நாங்கள் பயணம்
மேற்கொள்கிறோம்.” என தெரிவித்தார்.


source https://news7tamil.live/thousands-of-travelers-are-suffering-because-they-have-not-received-a-visa-for-umrah-travel-after-applying-for-several-days-saudi-and-indian-governments-are-requested-to-take-action.html