செவ்வாய், 23 ஏப்ரல், 2024

பிரதமர் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

 

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து RIP தேர்தல் ஆணையம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டாம் கட்டமாக சில மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  மத்தியில் ஆளும் பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல எதிர்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.  இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

சர்ச்சைக்குரிய வகையில் அப்படி என்ன பேசினார் பிரதமர் மோடி?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது..

“ ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து விடுவார்கள்.  பின்னர் அதனை ஊடுருவல்காரர்களிடம்  கொடுத்து விடுவார்கள் .   அதேபோல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  ஒவ்வொருவரின் சொத்துகளும் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நமது நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை உள்ளது என்றார்.  அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?  இதன் பொருள் உங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதுதானே.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நமது பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி கணக்கிடும்.  தங்கம் என்பது  ஒரு பெண்ணின் சுயமரியாதை.  ஒரு பெண் அணிந்துள்ள தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல,  அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பலரும் கண்டங்களை எழுப்பி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஏன் பிரதமர் மோடி மீது பாயவில்லை என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.  இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

source https://news7tamil.live/pm-modis-controversial-speech-minister-pdr-palanivel-thiagarajan-posted-as-rip-election-commission.html