வியாழன், 18 ஏப்ரல், 2024

வட மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு அலை; – ஸ்டாலின்

 

தேர்தல் பத்திரங்களில் நடந்த ஊழல், மோடியின் கிளீன் இமேஜை கிழித்துவிட்டது, மோடியைப் போல வசூல் வேட்டையில் ஈடுபட்ட வசூல் ராஜாவை நாடு பார்த்ததில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பெசன்ட் நகர் பகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நாட்டையும் நம்முடைய கூட்டணி தான் ஆளப்போகிறது, அதற்கு காரணம், தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கும் எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் மதவாத பேச்சு, எதிர்கட்சிகள் இருக்கக் கூடாது என்ற பாசிச எண்ணம் போன்றவை தான்.

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிறையில் அடைத்தார். தேர்தல் களம் என்பது சமமாக இருந்தால் படுதோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் தீய செயலில் ஈடுபட்டார்.

கார்ப்பரேட்டுகளை மட்டுமே முன்னேற்ற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதால் விலைவாசி உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து நிற்கிறது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என மோடி வாக்குறுதி கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சியில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்தாரா? இந்தக் கேள்வியைக் கேட்டால் இளைஞர்களை பக்கோடா சுட்டு விற்கச் சொன்னவர் தான் மோடி. 

தேர்தல் பத்திரங்களில் நடந்த ஊழல், மோடியின் கிளீன் இமேஜை கிழித்துவிட்டது. இதை சரிசெய்யும் வகையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யாருக்கு கொடுக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிய ஆரம்பித்ததாக வடை சுடுகிறார். தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் நிதி வாங்குகின்றன. இ.டி., ஐ.டி., சி.பி.ஐ., என கூட்டணி போல் செயல்படும் அமைப்புகளை வைத்து தொழில் நிறுவனங்களுக்கு ரெய்டுக்கு அனுப்புவது, பின் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்குவது என மறைமுக சங்கிலி தொடர்பு இருப்பது தான் இங்கே பிரச்னைக்குரிய ஒன்று. இதைப் பற்றி முன்னணி ஊடகங்கள் பேச மறுத்தாலும் பா.ஜ.க,வின் தில்லுமுல்லுகள் அம்பலமானது. 

இந்த நாடு எத்தனையோ முதல்வர்களைப் பார்த்துள்ளது. ஆனால், மோடியைப் போல வசூல் வேட்டையில் ஈடுபட்ட வசூல் ராஜாவை நாடு பார்த்ததில்லை. கொரோனாவில் கூட பி.எம் கேர்ஸ் நிதி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தினார். பிரதமரே கேட்டதால் பலரும் அள்ளிக் கொடுத்தனர். அந்த நிதி எங்கே போனது எனத் தெரியவில்லை. ஆர்.டி.ஐ., மூலம் கேட்டபோது, 'அது தனியார் அறக்கட்டளை,' விபரம் சொல்ல முடியாது என பதில் வந்தது.

நாட்டின் தணிக்கைக் குழுவான சி.ஏ.ஜி., சுட்டிக் காட்டிய ஊழலைப் பற்றி மோடி வாய் திறப்பதில்லை. இதை வெளியிட்ட சி.ஏ.ஜி., அதிகாரிகளை இடமாற்றம் செய்த மர்மம் என்ன? காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு 526 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை 1670 கோடியாக உயர்த்தி வாங்கினார். 'இதனால் பயன் அடைந்தவர்கள் யார்?' என காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. 

கார்ப்ரேட்டுக்களுக்கு பல்லாயிரம் கோடிகளை தள்ளுபடி செய்ததைப் பற்றி ராகுல் கேட்டபோது, அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதலை நடத்தினார். அவரின் எம்.பி., பதவியை பறித்தார். இவ்வளவு செய்துவிட்டு ஊழலைப் பற்றி மோடி பேசலாமா? அதனால்தான் சொன்னேன். உண்மையிலேயே ஊழலுக்கு பல்கலைக்கழகம் கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் எனில், மோடியை விட்டால் அதற்கு யாருமே கிடையாது. ஏனெனில், ஊழலை சட்டபூர்வமாக்கியவர் மோடிதான்

ஊழல்வாதிகளுக்கு கியாரண்டி கொடுக்கும் அரசாக பா.ஜ.க, அரசு உள்ளது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயலில் ஈடுபடுகிறது பா.ஜ.க. முன்பெல்லாம் இதைப் பற்றி பேசினால 'ஆன்டி இந்தியன்' என்பார்கள். இந்தியா கூட்டணி அமைந்ததும் நாட்டின் பெயரை பாரத் என மாற்றினர். இப்போது ஆன்டி இந்தியனாக சுற்றுவது பா.ஜ.க,வினர் தான். அவர்கள் கொடுப்பது தான் மக்களுக்கு செய்தி என செயல்படுகிறார்கள். வேறு செய்திகள் வந்தால் மத உணர்வுகளைத் தூண்டி திசை திருப்புவார்கள். மத பிரச்னைகள் இல்லாவிட்டால் எப்படி பிரச்னையை உண்டாக்கலாம் என யோசிக்கிறார்கள்.

இரவில் தனியாக அமர்ந்து பேய் படம் கூட பார்த்துவிடலாம். ஆனால், இரவில் மோடி பேசுகிறார் என்றாலே மக்களுக்கு படபடப்பு வந்துவிடும். ஒருநாள் இரவில் பண மதிப்பிழப்பை அறிவித்தார். இதன்மூலம், 99 சதவீத பணம் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பணமதிப்பிழப்பை ஆதரித்தவர்களே எதிர்த்தார்கள். '2000 ரூபாய் நோட்டு செல்லாது' என்றார். அந்தப் பணமும் 98 சதவீதம் வந்துவிட்டது. பணமதிப்பிழப்பு என்பது ஏழைகள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல். பின்னர் அனைவரையும் வங்கிகளில் கணக்கு துவங்க சொன்னார்கள். கொஞ்ச நாளில், 'மினிமல் பேலன்ஸ் இல்லை' எனக் கூறி, 21,000 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டனர். 

மீண்டும் ஒருநாள் இரவு நாடாளுமன்றம் வந்து ஜி.எஸ்.டி., சட்டம் போட்டார். அரிசி, பருப்பு, சேமியா, சர்க்கரை, மஞ்சள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி, கோயிலில் ஏற்றும் சூடத்துக்கு 18 சதவீத வரி, ஊதுபத்தி சாம்பிராணிக்கு 5 சதவீத வரி, மெழுகுவர்த்திக்கு 12 சதவீத வரி. மாணவர்களின் நோட்டு புத்தகத்துக்கு 12 சதவீத வரி என விதித்து கொள்ளையடித்தார்கள்.

கொரோனா வந்தபோது ஒருநாள் இரவு பிரதமர் பேசினார். மக்களுக்கு ஏதோ சொல்லப் போகிறார் என எதிர்பார்த்தால், 'மணி அடியுங்கள்... விளக்கு பிடியுங்கள்' எனக் கூறிவிட்டுப் போய்விட்டார். கொரோனா காலத்தில் வேலையில்லாமல் தவித்த தொழிலாளர்கள் பல்லாயிரம் கி.மீ தூரம் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்குப் போனார்கள். அப்போது தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 16 பேர் உயிரிழந்தனர். நாட்டு மக்கள் அவஸ்தைப்பட்டதை தனக்கான விளம்பர வாய்ப்பாக பார்த்தவர் மோடி. 

'ரேவடி கலாசாரத்தை ஒழிப்போம்' என்று கூறி மாநில அரசின் இலவச திட்டங்களை குறுகிய பார்வையோடு பார்த்தவர் தான் மோடி. மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இருந்து 50 சதவீத கட்டண சலுகையை எடுத்துவிட்டார். '10 ஆண்டுகால ஆட்சி டிரைலர் தான்' என பஞ்ச் டயலாக் பேசினார். டிரைலரே கர்ண கொடூரமாக இருந்தால், படம் ஓடவா போகிறது. '10 ஆண்டு ஆட்சி வெறும் சூப் தான்... இனி தான் மெயின் டிஷ் வரப் போகிறது' என்றார். ஆனால், சூப் கேவலமாக உள்ளதாக மக்கள் வாந்தியெடுக்கின்றனர்.

இப்போது 3வது முறையாக மோடி வாய்ப்பு கேட்கிறார். அப்படி கொடுப்பது என்பது மக்கள் தங்கள் தலையில் தானே அள்ளிப் போடுவதைப் போல தான். மோடியின் பேச்சுகளை நீங்களே எடை போட்டுப் பாருங்கள். அவர் பேச்சில் எதையெல்லாம் மையக் கருத்தாகப் பேசுகிறார் என்பதைப் பாருங்கள். நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகாலம் இருந்துவிட்டு அரசியலைப் பேசுவதில் அவருக்கு கூச்சம் இல்லை. 

மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது, நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது, சட்டமன்றம் இருக்காது. ஒற்றைச் சர்வாதிகார நாடாக மாற்றப்படும். அறிவியல் பின்னுக்கு தள்ளப்பட்டு பிற்போக்கு கதைகள் புகுத்தப்படும். அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும். மக்களிடம் வேறுபாட்டு உணர்வைத் தூண்டி இந்தியாவை நாசம் செய்துவிடுவார்கள். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரங்களும் இருக்காது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உடை, ஒரே பண்பாடு என ஒற்றை சர்வாதிகார நாடாக மாறிவிடும். மக்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படும். அம்பேத்கர் சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டு ஆர்.எஸ்.எஸ்., சட்டம் கொண்டு வருவார்கள். தேசியக் கொடியை கழட்டிவிட்டு காவிக் கொடியை பறக்கவிடுவார்கள்.

மக்களால் ஓரம்கட்டப்பட்ட பிறகு பா.ஜ.க,வை ஏன் எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேரின் முதுகிலும் குத்தியவர் தான் பழனிசாமி. அவரை துரோக சாமியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள். இவர்கள் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிரிகள். பதவி சுகத்துக்காகவும் ஊழலுக்காகவும் பா.ஜ.க,வின் மக்கள் விரோத திட்டங்களை பழனிசாமி ஆதரித்தார். பா.ஜ.க,வை எதிர்க்க துணிவு வேண்டும். அது பழனிசாமியிடம் இல்லை. இந்த துரோக கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-stalin-slams-modi-bjp-government-at-chennai-lok-sabha-election-campaign-4489553