செவ்வாய், 30 ஏப்ரல், 2024

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

 

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2ம் கட்ட தேர்தல் மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே கர்நாடகாவின் ஹசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனான இவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த 26-ஆம் தேதி (26.03.2024) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் கூறப்பட்டதோடு, அது தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இது தொடர்பாக மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து இந்த விவகாரத்தில் பிரஜ்வல் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெங்களூருவில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரியங்கா காந்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரியங்கா காந்தி பதிவிட்டிருப்பதாவது :

“பிரஜ்வல் ரேவண்ணா செய்த கொடூரமான குற்றங்களைப் பற்றி கேள்விப்பட்டதும் நெஞ்சம் பதறுகிறது. நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். பிரதமருடன் தோளோடு தோள் நின்று பரப்புரையில் ஈடுபட்ட பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி பதில் ஏதும் கூறாமல் பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்”

இவ்வாறு பிரியங்கா காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/why-is-modi-silent-on-prajwal-revanna-issue-priyanka-gandhi-question.html