குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கஞ்சா, ஹெராயின் என உள்நாட்டு போதைப்பொருட்கள் முதல் மெத்தபேட்டைமைன் வரையிலான வெளிநாட்டு போதைப்பொருட்களும் அதிக அளவில் புழங்கி வருகிறது. சென்னையில் அண்மையில் 2,500 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இது தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட்டவிரோத கும்பல்கள் அதிக அளவில் தயாரிப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கின. இதில் குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இதேபோல, ராஜஸ்தானின் ஜலோர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரம்மாண்டமான போதைப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகள், பிரம்மாண்டமான வேதியியல் ஆய்வகம் போல காட்சியளித்தன. அமெரிக்காவின் புகழ்பெற்ற வெப்சீரீயஸான ‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) நாடகத்திலும் இதுபோல போதைப்பொருள் ஆய்வுக் கூடம் காட்டப்பட்டிருக்கும்.
source https://news7tamil.live/indias-largest-drug-manufacturing-facility-discovered-in-gujarat.html