வெள்ளி, 19 ஏப்ரல், 2024

மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 25% மட்டுமே செலவு செய்த எம்.பி-க்கள்:

 தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 19) 39 மக்ளவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் 


கடந்த 5 ஆண்டுகளில் தமிழக எம்.பிகள் தங்கள் தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது.  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதி மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவில் நிதி வழங்கி வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக எவ்வளவு வழங்கப்பட்டது? அவற்றில் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் கேட்டுள்ளார். 

இதற்கு மத்திய புள்ளியியல் அமைச்சகம் தகவல் அறித்துள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில் உள்ள 39 எம்பிக்கள் 2019 - 2024 காலகட்டத்தில், தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் 75% செலவிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதேசமயம், மத்திய அரசின் நிதி வழங்கலும் இந்த காலகட்டத்தில் 44 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிக்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு தலா ரூ.5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குகிறது. கரோனா காலகட்டத்தில் மட்டும் இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி, 2020 ஏப்ரல் 6-ம் தேதி முதல் 2021 நவம்பர் 9-ம் தேதி வரை தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை.

கரோனா காலகட்டம் தவிர்த்து 2019 முதல் 2024 வரையில் ரூ.663 கோடி தமிழ்நாட்டு எம்பிக்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.367 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது 44.64 சதவீதம் குறைவு ஆகும்.

இதிலும் தமிழக எம்பிக்கள் ரூ.93 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளனர். மீதமுள்ள ரூ.274 கோடி செலவிடப்படவில்லை. அதாவது தொகுதி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட தொகையில் 75% தமிழக எம்பிக்கள் செலவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

அதிகபட்சமாக தென்சென்னை தொகுதி திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ரூ.14.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரணி தொகுதி எம்பி விஷ்ணு பிரசாத்துக்கு ரூ.4.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்பி சு.வெங்கடேசன், தனக்கு வழங்கப்பட்ட நிதியில் பெரும்பாலான நிதியை தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. மத்திய சென்னை மற்றும் வேலூர் தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எதுவும் செலவிடப்படவில்லை என்று அதில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-mlas-spent-only-25-percent-of-constituency-development-fund-4490886

Related Posts: