தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்து, அச்சிட்டு வழங்கி வருகிறது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை விலையில்லா புத்தகங்களாக தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்த விலையில் புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இந்தப் பாடப்புத்தகங்களே அடிப்படை என்பதால், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களும் இந்தப் புத்தகங்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துவர்.
இந்தநிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. காகித விலை உயர்வு, அச்சிடும் கட்டண உயர்வு காரணமாக வேறு வழியின்றி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வைப் பொறுத்தவரை, ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 390 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 380 ரூபாயிலிருந்து 530 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 430 ரூபாயிலிருந்து 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நான்காம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 470 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 510 ரூபாயிலிருந்து 710 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 790 ரூபாயிலிருந்து 1110 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 860 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 690 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 770 ரூபாயிலிருந்து 1110 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை 790 ரூபாயிலிருந்து 1130 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாட வாரியாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த விலை உயர்வுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த விலை உயர்வால் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேபோல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களும் பாடப்புத்தகங்கள் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-govt-hikes-school-text-books-price-6853021