12 08 2024
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அதவத்தூர் மற்றும் மணிகண்டம் பகுதியை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து 1,500க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 90% விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் எங்களது கிராமங்களை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என கூறி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று அதவத்தூர் மக்கள் கூறினார்கள். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் எல்லோரும் சென்று மனு கொடுக்க முடியாது என்று கூறினர். இதனால் சிறிது நேரம் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பொதுமக்கள் சிலர் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீசார் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை இழுத்து மூடியதால் ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதனை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு வட்டங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், அதவத்தூர் ஊராட்சியும் ஒன்று.
இந்த கிராம ஊராட்சியானது அதவத்தூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, கொய்யாத்தோப்பு பாளையம், மேலப்பேட்டை, நெட்டச்சிக்காடு, நொண்டி திருமன்காடு, தப்புக்கொட்டிக்காடு, அடைக்கன்காடு, சீத்தாக்காடு, குன்னுடையான்காடு, சந்தை, ஜெ.ஜெ.நகர், விநாயகபுரம் ஆகிய சிற்றூர்களை உள்ளடக்கியது.
இங்கு சுமார் 3,500 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயமும், கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களையும் மக்கள் செய்து வருகின்றனர். ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியை மாநகராட்சியோடு இணைத்தால், எதிர்கால முன்னேற்றத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது என வலியுறுத்தி இக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-people-protest-in-collector-office-for-combing-village-to-trichy-corporation-6852742