கொடுங்கையூரில் உள்ள 4,306 சதுர அடி அரசு புறம்போக்கு நிலம், வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா குடும்பத்தினருக்குச் சொந்தமானது அல்ல, சென்னை ஆட்சியர் அலுவலகத்துக்குச் சொந்தமானது என்று பெருநகர சென்னை மாநகராட்சி உறுதி செய்துள்ளது.
தற்போது அந்த நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க குடிமைப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
பெரம்பூர் தாலுக்கா எருக்கஞ்சேரி கிராமத்தில் சர்வே எண் 8ல் உள்ள பிளாக் 22ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் எல்லையை குறிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவுக்கு, ஆக. 8ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலம் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் (கிழக்கு) சன்னதி தெருவையும் ராமகிருஷ்ணா தெருவையும் இணைக்கிறது. ஆனால் அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் மற்றும் குப்பைகளால் சூழப்பட்டுள்ளது.
“அது அரசு புறம்போக்கு நிலம். மாவட்ட ஆட்சியர்தான் நோடல் அதிகாரி”. அனைத்து வகையான அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் மீதும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் நிலத்தை அளந்தவுடன் சாலை அமைக்கலாம்” என்று ஆணையர் குமரகுருபரன் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தியின் படி, இதுதொடர்பாக வேளச்சேரி எம்.எல்.ஏ அசன் மவுலானாவிடம், கேட்டதற்கு, இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக, அவர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி, ஆக்கிரமிப்பு சாலையை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றபோது அசன் மவுலானா, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த நிலம் தனது குடும்பச் சொத்து என்றும், இந்த பிரச்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பின்னர் எம்.எல்.ஏ., ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நிலத்தை சரிபார்த்து மறுஅளவை செய்யுமாறு சென்னை மாநகராட்சி ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார்.
2023 செப்டம்பரில், மனுதாரர்கள் (வேளச்சேரி எம்.எல்.ஏ மற்றும் அவரது குடும்பத்தினர்) உரிமை ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து, கூறப்படும் சுற்றுச்சுவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்டோபர் 2023 இல், எம்எல்ஏ குடும்பத்தினர் விற்பனைப் பத்திரம் மற்றும் டவுன் சர்வே நிலப் பதிவேடு நகல்களைச் சமர்ப்பித்தனர்.
ஆனால் கூடுதல் அட்வகேட் ஜெனரல், மார்ச் 2024 இல் தனது சட்டக் கருத்துப்படி, இந்த நிலம் அரசுப் புறம்போக்கு என்றும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-kodungaiyur-disputed-land-velachery-mla-6846795