வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளது” – ஓவைசி குற்றச்சாட்டு!

 

மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என கூறி மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது.  இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த சட்டதிருத்த மசோதாவை  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட திருத்த மசோதாவில் வஃக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த சூழலில் வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, அரசியலமைப்புக்கு எதிரானது என்று காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மக்களவையில் பேசினர்.

இந்த நிலையில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவர் இது குறித்து பேசுகையில், “மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது” என குற்றம்சாட்டினார். இந்த மசோதாவுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.


source https://news7tamil.live/bjp-government-is-in-the-process-of-dividing-people-on-the-basis-of-religion-asaduddin-owaisi.html