செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

NIRF Ranking 2024: ஒட்டுமொத்த பிரிவில் முதலிடத்தை தக்கவைத்த ஐ.ஐ.டி சென்னை; டாப் 10 கல்லூரிகளின் லிஸ்ட் இங்கே!

 NIRF Overall Ranking 2024: இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) சமீபத்திய தரவரிசையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்த மற்றும் பொறியியல் பிரிவுகளில் நாட்டின் நம்பர் ஒன் நிறுவனமாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஐ.ஐ.டி.,கள் இந்த ஆண்டும் ஒட்டுமொத்தப் பிரிவில் முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

ஐ.ஐ.டி சென்னை தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பொறியியலில் முதல் இடத்தைப் பிடித்தது. ஒட்டுமொத்த பிரிவில், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி) இரண்டாவது இடத்தையும், ஐ.ஐ.டி பாம்பே, ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி கான்பூர் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஐ.ஐ.டி காரக்பூர் ஆறாவது இடத்தையும், டெல்லி எய்ம்ஸ் ஏழாவது இடத்தையும், ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் ஐ.ஐ.டி கவுகாத்தி எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தையும் பெற்றன. 10வது இடத்தை புதுதில்லி ஜே.என்.யு பெற்றுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும், நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் ஐ.ஐ.டி.,கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு, ஐ.ஐ.டி சென்னை 86.69 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்.சி) 83.09 மதிப்பெண்களைப் பெற்றது.

2023 ஆம் ஆண்டில், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி பாம்பே மற்றும் ஐ.ஐ.டி கான்பூர் ஆகியவை முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தன. ஐ.ஐ.டி காரக்பூர், ஐ.ஐ.டி ரூர்க்கி, ஐ.ஐ.டி கவுகாத்தி ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பெற்று ஐ.ஐ.டி ஆதிக்கத்தைத் தொடர்ந்ததால், ஐ.ஐ.டி ஆதிக்கம் செலுத்தும் பட்டியலில் எய்ம்ஸ் டெல்லி ஆறாவது இடத்தைப் பிடித்தது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இம்முறை, ஒன்பதாவது என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில், ‘திறந்த பல்கலைக்கழகங்கள்’, ‘திறன் பல்கலைக்கழகங்கள்’ மற்றும் ‘மாநில நிதியுதவி பெறும் அரசுப் பல்கலைக்கழகங்கள்’ என மூன்று புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அனில் சஹஸ்ரபுதே, அடுத்த ஆண்டு முதல் ‘நிலைத்தன்மை தரவரிசையை’ தொடங்க அமைச்சகம் இலக்கு வைத்துள்ளதாகவும் அறிவித்தார். கூடுதலாக, இந்த ஆண்டு, மதிப்பீட்டு அளவுகோல்களும் மாற்றப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் 1:15ல் இருந்து 1:10 ஆகவும், மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் 1:15ல் இருந்து 1:20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-dominates-nirf-ranking-2024-overall-heres-the-list-of-top-10-institutes-in-india-6851741