சென்னை மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும், மாநில உரிமைகளைப் பெறத் தைரியமின்றி ஓடி ஒளிவது புதுச்சேரி மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களின் வளர்ச்சியை முன்னெடுக்க அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்டதுதான் முதல்வர்கள் அடங்கிய மண்டலக் குழுக்கள் ஆகும். இந்திய நாடு ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தின் கூட்டாட்சி, உள்கட்டமைப்பு, மாநிலங்களின் ஒருங்கிணைப்பு போன்றவை பற்றி ஆண்டுதோறும் விவாதித்து முடிவெடுக்கும் கூட்டமாக இந்த மண்டலக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தென் மாநிலக் குழுவின் 31–வது மாநாடு நேற்றைய தினம் சென்னை கோவளத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அதில் தென் மாநிலங்களின் அனைத்து முதல்வர்களும் பங்கேற்றுத் தங்கள் மாநிலத்தின் தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆழமாக விவாதித்த நிலையில், நமது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் இந்த மாநாட்டையும் புறக்கணித்திருப்பது மாநிலத்திற்கு அவர் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.
கடந்த காலங்களில் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் போன்ற மிக முக்கிய மாநாடுகளைப் புறக்கணித்து வந்தது போலவே, இந்த மாநாட்டையும் புறக்கணித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இது மாநிலத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கும் செயலாகும்; அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்படுவேன் என்று அவர் பதவிப் பிரமாணம் எடுத்ததற்கு விரோதமான செயலாகும்.
கடந்த ஐந்தாண்டு காலமாக பாஜக–என்.ஆர்.காங்கிரஸ் இரட்டை என்ஜின் ஆட்சியில் புதுச்சேரி பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது. மாநில அந்தஸ்து, விமான நிலைய விரிவாக்கம், கூடுதல் நிதி ஒதுக்கீடு, நீர்வளத் தேவைகள், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு என பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளை இம்மாநாட்டில் முன்வைத்து தீர்வுகாணும் நல்ல சந்தர்ப்பத்தை முதல்வரின் புறக்கணிப்பு நழுவவிட்டுள்ளதை உணர முடிகிறது.
சமீபத்தில் புதுச்சேரி வந்த உள்துறை அமைச்சருடன் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் இவர்களுக்குள்ளான அதிகாரப் பகிர்விற்கு தீர்வுகாண முடியாத நிலையில், இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு இழுபறியில் உள்ள பொழுது எப்படி உள்துறை அமைச்சரைச் சந்திப்பது என்ற பயத்தில் மாநாட்டைப் புறக்கணித்தாரா? அல்லது தனக்கு போட்டியாக மாநிலத் துணைநிலை ஆளுநர் பங்கேற்பதைப் பொறுத்துக்கொள்ளாமல் புறக்கணித்தாரா? என்பதை முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், இவர்களின் போட்டி அரசியல் புதுச்சேரி மக்களின் வாழ்வையும் வளர்ச்சியையும் பாதிப்பதாக உள்ளதை எவராலும் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர், மாநிலப் பிரச்சனைகளை ஒன்றிய அரசிடம் நேரடியாக முன்வைத்து விவாதிக்கத் தைரியமில்லாமல் அஞ்சி ஓடி ஒளிவது ஏன்? புதுச்சேரி மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதில் முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதை அவரது புறக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஆளுநரின் அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுத்துவிட்டுத் தனது பொறுப்பிலிருந்து தப்பி ஓடிய ரங்கசாமி அவர்கள், ஆளுநர் மாநாட்டில் முன்வைத்த மாநிலப் பிரச்சனைகள் மீது இவரது கருத்து என்ன என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். அதில் இவருக்கு உடன்பாடு உண்டா? இல்லை ஆளுநரின் கருத்துக்கள் இரட்டை ஆட்சியில் வேறு ஒரு நிலைப்பாடா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த மாநாட்டில் பங்கேற்று இருந்தால், அதன் மூலம் தனக்கு நிகராக ஆளுநருக்கு மாநாட்டில் இடம் தந்ததைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்க முடியும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்கள் தங்கள் ஆளுநர் மூலம் பங்கேற்கலாமே தவிர, சட்டமன்றமும் அமைச்சரவையும் உள்ள யூனியன் பிரதேச ஆளுநர்கள் பங்கேற்பதைத் தடுத்திருக்க முடியும்.
மக்கள் பிரச்சனையும் பேசாமல், ஆளுநரின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்காமல் ஓடி ஒளிவதும் மவுனம் காப்பதும் ஒரு முதல்வருக்கு அழகல்ல. இது மிகப் பெரிய கோழைத்தனமும், புதுச்சேரி மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகமும் ஆகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என்று
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/dmk-siva-condemns-rangasamy-skipping-southern-zonal-council-meeting-12410854





