(மார்ச், 2009)
ம.செந்தமிழன்
மிகவும் சுருக்கமான கட்டுரைதான். நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் எழுதினேன். சில கட்டுரைகள் நீளமானவை. வாசிப்போருக்கு இருக்கும் எண்ணற்ற பணிகளில் நீளமான கட்டுரைகளைப் படிக்க முடிவதில்லை. ஆனால், நான் நினைத்தாலும் என்னால், இக்கட்டுரையை நீளமாக எழுத இயலாது. இது அழுதுகொண்டே எழுதப்பட்டது அல்லது அழுகையின் வெளிப்பாடாக எழுதப்பட்டது. நீண்ட நேரம் அழ இயலாததால், சுருக்கென முடித்துவிட்டேன்.
எங்கள் தோட்டத்தில் கத்தரிக்காய்கள் கடந்த மாதம் காய்க்கத் தொடங்கின. முதல் பறிப்பில் கிடைத்த 20 கிலோவை எடுத்துக்கொண்டு காய்கறி ஏலக் கடைக்குச் சென்றேன். அங்கே உள்ள நடைமுறைப்படி எத்தனை மூட்டைகளானாலும், மாலை நேரம் ஏலக் கடையில் வைத்து விட்டுச் சென்று விட வேண்டும். எடை போட மாட்டார்கள். நாமே எடை போட்டு வந்தாலும் அந்த எடையைக் கணக்கில் வைக்க மாட்டார்கள். காய்கறிகள் அதிகாலை 4 மணிக்கு ஏலம் விடப்படும். அப்போதுதான் ஒவ்வொரு மூட்டையாக எடை போடுவார்கள்.
காலை முதல் மாலை வரை தோட்டத்தில் கடுமையாக உழைத்துவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு ஏலக் கடைக்குச் சென்று மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, வீடு திரும்பும் விவசாயிகளால், அதிகாலை 4 மணி ஏலத்திற்கு வர முடிவதில்லை. காலை 9 மணிக்கு மேல், ஏலக்கடைக்குப் போனால் ஒரு துண்டுச் சீட்டில் எத்தனை கிலோ, என்ன விலைக்கு ஏலம் போனது என்ற விவரங்கள் எழுதப்பட்டு, அதற்குரிய பணத்துடன் தரப்படும்.
எனது 20 கிலோ கத்தரிக்காயையும் இதே முறைப்படி வைத்துவிட்டுப் போனேன்.
ஆனால், எனக்கு ஏலத்தைப் பார்க்காமல் பணம் வாங்குவதில் விருப்பமில்லை. அதிகாலை ஏலம் நடக்கும் போது சந்தைக்குப் போனேன். ஏலம் ஒரு கிலோ கத்தரிக்காய், 2 ரூபாயில் தொடங்கியது. 4 ரூபாய் வரை அதிவேகமாக நகர்ந்து 5 ரூபாயில் முடிந்தது. எனது 20 கிலோ கத்தரிக்காயை ஏலக் கடைக்காரர் 18 கிலோதான் இருந்தது என்றார். மீண்டும் என் எதிரே எடை போடச் சொன்னபோது, ’விருப்பமில்லை என்றால் மூட்டையை எடுத்துப் போகலாம்’ என்றார். ’முதல் நாள் பறித்த காய், இரவில் எடை குறையும் என்றும் அதனால்தான் இரவில் எடை போடுவதில்லை’ என்றும் விளக்கம் கூறினார்.
எனக்கான 90 ரூபாயில் ஏலக் கடைக் கழிவு 9 ரூபாய் (10 சதவீதம்) பிடித்துக் கொண்டு, 81 ரூபாய் தரப்பட்டது. ஆக மொத்தம், ஒரு கிலோ கத்தரிக்காயின் விலை 4ரூபாய் 50 பைசா!
அன்று மாலை தஞ்சாவூரில் உள்ள பல்வேறு காய்கறிக் கடைகளிலும் கத்தரிக்காய் விலையை விசாரித்தேன். ஒரு கிலோ 24 ரூபாய்க்கு விற்பனையானது! எங்கள் தோட்டத்துக் கத்தரிக்காய்கள் எவையெனச் சந்தையில் தேட முடியுமா அல்லது தேடிக் கண்டாலும், கிலோ ரூ.4.50 என்ற விலைக்குத்தான் என்னால் வாங்க முடியுமா?
உங்கள் ஊர்களிலும் கத்தரி,வெண்டை உள்ளிட்ட காய்களின் ஏலமும் கோலமும் இதைப் போன்றதுதான் என நம்புகிறேன்.
சந்தையில் நான் கவனித்த மற்றொரு மாறுபாடு, தராசு தொடர்பானது. ஏலக்கடைகளில் எங்கள் காய்கறிகளை அளவிடும் தராசுகள், பழைய முறையிலான ராத்தல் தராசுகள். அவற்றில் ஒரு கிலோவுக்கும் இரண்டு கிலோவுக்குமான வேறுபாட்டைக் காண்பது கடினம். காய்கறிச் சந்தைகளிலோ, நவீன டிஜிடல் தராசுகள் உள்ளன. இவற்றில், ஒரு கிராம் கூட துல்லியமாகக் காட்டப்படுகிறது. கொள்முதலுக்கு குத்துமதிப்பான தராசுகள், விற்பனைக்குத் துல்லியமான தராசுகள்!
நிற்க.
இப்போது வால்மார்ட் எனும் பெருநிறுவனம் வரப்போவதாகவும், அது வந்தால் விவசாயிகளும் வணிகர்களும் சுரண்டப்படுவார்கள் என்றும் நிறையபேர் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
எங்கள் கத்தரிக்காய், வெண்டைக்காய் கூட்டத்தின் சார்பாக ஒரு கேள்வி;
விவசாயிகளைச் சுரண்டும் அதிகாரம் உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும்தான் உண்டா? உலகமய வணிகர்களுக்கு இல்லையா?
நான் படிக்காத கூட்டத்தின் பிரதிநிதி என்பதால் இந்தச் சந்தேகம் எழுந்தது. மற்றபடி, உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
எங்கள் கத்தரிக்காய், வெண்டைக்காய் கூட்டத்தின் சார்பாக ஒரு கேள்வி;
விவசாயிகளைச் சுரண்டும் அதிகாரம் உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும்தான் உண்டா? உலகமய வணிகர்களுக்கு இல்லையா?
நான் படிக்காத கூட்டத்தின் பிரதிநிதி என்பதால் இந்தச் சந்தேகம் எழுந்தது. மற்றபடி, உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.