வியாழன், 15 டிசம்பர், 2016

சேகர் ரெட்டிக்கு அச்சகத்தில் இருந்து நேரடியாக வந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மூத்த அதிகாரிகள் 10 பேர் சிக்குகிறார்கள்

ஐதராபாத்

சென்னையை சேர்ந்த கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.சேகர் ரெட்டியின் சென்னை வீடு, அலுவலகங்கள், காட்பாடி வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ந்நாள்  சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

 3வது  நாள் சோதனையில் சேகர் ரெட்டி காரில் ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்துமே புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்பதும் அதிர்ச்சியின் உச்சம். நாட்டு மக்கள் பணமின்றி தவிக்கும் நிலையில், வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த சதிச் செயலை அவர் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த தரகர்கள் மூலமாக தம்மிடம் இருந்த ரூ.80 கோடி பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் சேகர் ரெட்டி.

 3 வது நாளாக சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் இன்றும் 40 கிலோ தங்கத்தை பறிமுதல்செய்தனர்.இதுவரை 179 கிலோ பிடிபட்டு உள்ளது. 

அவரிடம் இருந்து 161 கோடி ரூபாய் ரொக்க பணம், 179 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த ரூ.161 கோடியில் 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் ஆகும்.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு ஒழித்ததை தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனாலும், மக்கள் தேவைக்கு தகுந்தார் போல் அதிக அளவில் பணத்தை அச்சிட்டு வெளியிடவில்லை.

எனவே, பணம் கிடைக்காமல் நாடு முழுவதும் மக்கள் திண்டாடி வருகிறார்கள். ஏ.டி.எம்.களில் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனாலும், பண தட்டுப்பாட்டால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மூடியே கிடக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சேகர் ரெட்டிக்கு மட்டும் 2 ஆயிரம் புதிய நோட்டுகள் 34 கோடி ரூபாய் அளவுக்கு கிடைத்தது எப்படி? என்பது மர்மமாக இருந்தது.

இது தொடர்பாக வருமானவரி துறையினர், அமலாக்க பிரிவினர் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆகியோர் இப்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். அதில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சாகும் அச்சகத்தில் இருந்தே சேகர் ரெட்டிக்கு நேரடியாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அச்சகத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் வழக்கமாக ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் அந்த பணம் ஒவ்வொரு வங்கிக்கும் பிரித்து கொடுக்கப்படும்.

ஆனால், உயர்மதிப்பு நோட்டு செல்லாது என அறிவித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டதால் அந்த பணம் வங்கிகளுக்கு சென்றடைய கால தாமதமாகி விடும் என்பதற்காக அச்சகத்தில் இருந்தே சில வங்கிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டன.

இதன்படி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஸ்டேட் வங்கி சிறப்பு பண நிர்வாக கிளைக்கு (ஸ்கேப்) அனுப்பப்பட்டது. ஆந்திராவில் இந்த கிளை விசாகபட்டினத்திலும், தெலுங்கானாவில் இந்த கிளை குன்பவுண்டரியிலும் உள்ளன.

இந்த கிளைகளுக்கு வந்த பணத்தை அப்படியே திசை மாற்றி சேகர் ரெட்டிக்கு அனுப்பி உள்ளனர். இப்படித்தான் அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக கிடைத்துள்ளன.

இதில், ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரிகள் 10 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்துகிறார்கள்.

சேகர் ரெட்டிக்கு மட்டுமல்லாமல், மேலும் பல கருப்பு பண முதலைகளுக்கும் இங்கிருந்து பணம் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, அதுபற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு உடந்தையாக இருந்த 10 அதிகாரிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts: