பெங்களூருவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.2.89 கோடியை வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதில் ரூ.2.25 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாகும், இந்த ரூபாய்க்கு காவலாக 2 பயங்கர நாய்களையும், ஒரு மூதாட்டியும் காவலாக இருந்தனர்.
ரகசிய தகவல்
பெங்களூருவில் வடபகுதியில் உள்ள யஸ்வந்த்பூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள அந்த வீட்டை வருமான வரித்துறையினர் சோதனையிட முயன்றனர். அப்போது, அந்த வீட்டியல் அதிபயங்கர 2 நாய்களும், ஒரு மூதாட்டியும் இருந்தனர். இதில், வருமானவரித்துறையினர் சோதனைக்கு அந்த மூதாட்டி ஒத்துழைக்க மறுத்தார்.
நாய்கள் காவல்
இதையடுத்து, வருமான வரித்துறையினர் போலீசார் உதவியுடன், நேற்று காலை, அந்த குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்து சோதனை இட்டனர். அப்போது, ஒரு பீரோவில் கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுகளும், பழைய ரூபாய் நோட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த பீரோவுக்கு இரு பயங்கர நாய்கள் காவல் காத்துவந்தன.
அந்த பீரோவில் உள்ள நோட்டுகளை கணக்கீடு செய்ததில், ஒட்டுமொத்தமாக கணக்கில் வராத, ரூ.2.89 கோடி பணம் இருந்தது. இதில், ரூ.2.25 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தன. இதையடுத்து, அந்த ரூபாய்களை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவாவில் ரூ.68 லட்சம்
அதேபோல, கோவா மாநிலம், பானாஜி நகரில், ஒரு நபரிடம் இருந்து ரூ.68 லட்சத்துக்கு புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை வருமானவரித்துறையினர் நேற்று பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நபர் மஹாராஷ்டிரா, கோவா எல்லையில் சுற்றித்திரிந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் இந்த ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.
ரூ.29 கோடி
கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்யப்பட்ட பின், கர்நாடகா மற்றும் கோவா வருமானவரித்துறையினர் சார்பில், இதுவரை, ரூ.29.86 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.20.22 கோடி புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளாகும். மேலும், 41.6 கிலோ தங்க கட்டிகள், 14 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.