செல்லாக்காசு விவகாரத்தில் வங்கிகளில் பணம் செலுத்தும் நடைமுறையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு நடைமுறைகள் விதிப்பதும், பின்னர் அவற்றின் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு செய்வதும் நடைபெறுகின்றன.
அவ்வகையில் ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் படி கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரப் படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்குகள் வைத்திருப்பவர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என்றும் அவர்களிடம் கேள்விகள் எதுவும் கேட்கப்படாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளில் வரும் டிசம்பர் 30ம் தேதி வரை 5ஆயிரம் ரூபாய்க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளாக டெபாசிட் செய்தால் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மேலும் ஒரே ஒரு முறை மட்டுமே 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய முடியும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.