வியாழன், 22 டிசம்பர், 2016

‘பிரதமர் மோடியின் தேதி வாரியாக லஞ்சப் பட்டியல்’ ராகுல் காந்தி வெளியிட்டதால் ‘வெடித்தது பூகம்பம்’;

பிரதமர் மோடியின் தேதி வாரியாக லஞ்சப் பட்டியல்’
ராகுல் காந்தியின் வெளியிட்டதால் ‘வெடித்தது பூகம்பம்’;
 ‘ பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, 2013-14ம் ஆண்டில் சஹாரா, பிர்லா நிறுவனத்திடம் இருந்து ரூ. 40 கோடி லஞ்சமாக பெற்றார் ’ என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
பூகம்பப் பேச்சு
நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “ பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்து என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இது குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால், நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும். அதனால், என்னை பாரதியஜனதா கட்சியின் பேசவிடாமல் தடுக்கிறார்கள்” என கூறியிருந்தார்.
பெரிதாக எடுக்கவில்லை
ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்த பாரதிய ஜனதா கட்சி, “ ராகுல்காந்தியின் பேச்சை எல்லாம் கருத்தில் கொள்வதில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவது காங்கிரஸ் கட்சியின் பழக்கம். ராகுல் காந்தி இது போல் வேடிக்கையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்” எனத் தெரிவித்தது.
பிரசாரம்
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ராகுல்காந்தி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த மிகப்பெரிய பேரணியில் ராகுல்காந்திபேசியதாவது-
ரூ.40 கோடி
பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் முன், குஜராத் மாநில முதல் அமைச்சராக நீண்ட ஆண்டுகளாக இருந்தார். அப்போது கடந்த 2013-14ம் ஆண்டில், முதல்வராக மோடி இருந்த போது,  சஹாரா, பிர்லாநிறுவனத்திடம் ரூ. 40 கோடி லஞ்சமாக பெற்றுள்ளார். இதில் குறிப்பாக சஹாரா நிறுவனத்திடம் மட்டும் 9 முறை லஞ்சம் பெற்றுள்ளார்.
ஆவணங்கள்
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் முதல் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாத இடைவெளியில் மோடிக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சஹாரா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது,அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு அளித்த லஞ்சம் குறித்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேபோல, பிர்லா குழுமமும் ரூ. 12 கோடி லஞ்சமாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு கொடுத்துள்ளது.
தேதிவாரியாக
அந்த ஆவணத்தில், 2013,அக்டோபர் 30 ந்தேதி ரூ.2.5 கோடி, நவம்பர் 12-ந்தேதி ரூ. 5 கோடி, நவம்பர் 27-ந்தேதி ரூ.2.5கோடி, நவம்பர் 29-ந்தேதி ரூ.5 கோடி மோடிக்கு லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6-ந்தேதி ரூ. 5 கோடி,  19ந்தேதி ரூ.5 கோடி, 2014ம்ஆண்டு ஜனவரி 14-ந்தேதி ரூ. 5 கோடி,  28ந்தேதி ரூ. 5 கோடி, பிப்ரவரி 22ந்தேதி ரூ. 5 கோடி என மோடிக்கு லஞ்சமாக சஹாரா நிறுவனம் அளித்துள்ளது.
கார்டுகளால் என்ன பயன்?
 ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டுகளை செல்லாது என சர்ஜிகல் ஸ்டிரைக்கை மோடி அறிவிக்கவில்லை. நேர்மையான ஏழைமக்களுக்கு எதிராக இந்த ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’கை தொடுத்துள்ளார். ஒரு விவசாயி, காசோலை மற்றும் டெபிட், கிரெடிட்கார்டுகள் மூலம் விதைகளை வாங்க முடியாது. அப்படி இருக்கையில், அவர்களிடம் இருந்து பணத்தை மோடி பறிமுதல் செய்துவிட்டார்.
ஆதரிக்கும்
ஊழலையும், கருப்புபணத்துக்கு எதிராக உண்மையாகவே பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்தால், அதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆதரிக்கும்.
நிலம் பறிப்பு
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம்,ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகியவற்றில் அங்குள்ள அரசுகள் பழங்குடியின மக்களிடம் இருந்து நிலத்தை பறித்துக்கொண்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தில் தலித்துக்களை கொலை செய்வதால், அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
எது கருப்புபணம்?
பிரதமர் மோடி  ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், எல்லா பணமும் கருப்பு பணம் கிடையாது, அதேசமயம், எல்லா கருப்பு பணமும் ரொக்கமாக இருப்பதில்லை. இதற்கு உதாரணம் தொழிலதிபர் விஜய்மல்லையா தான்.
தனி விசாரணை தேவை
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் ஒரு சதவீத பணக்காரர்களிடம் இருந்து பணத்தை திரும்ப மோடியால் கொண்டு வர முடியாது. ஆனால், ஏழைகள் வங்கியில் பெற்ற கடனை வலுக்கட்டாயமாக வசூலித்து, வாராக் கடனை அடைக்க முடியும்.
சுவிட்சர்லார்ந்து அரசு, அங்குள்ள வங்கியில் கருப்பு பணத்தை டெபாசிட்செய்த இந்தியர்கள் பட்டியலை அரசிடம் அளித்தபின்னும், பிரதமர் மோடி ஏன், நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை?.
மோடியின் லஞ்சம் குறித்து விசாரணை செய்ய சுயமான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
ஆதரமற்றது, வெட்கப்பட வேண்டியது
பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டு குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “ பிரதமர் மோடியின் மீதுராகுல் கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. பொய்யானது. இப்படி கூறுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும், ஏமாற்றுத் தனமான செயல். அகஸ்டா வெஸ்ட் லான்ட் ஹெலிகாப்டர் ஊழலை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காகவும், காங்கிரஸ் தலைவர்கள், சோனியா குடும்பத்தினர் பெயர் வராமல் இருக்கவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறுகிறார்” என்றார்.
முதிர்ச்சியில்லா பேச்சு
பாரதியஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மன் கூறுகையில், “ ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல்  பேசுகிறார். வீணாகவும், சத்தம் போட்டு பேசுவதையும் வாடிக்கையாக் கொண்டவர் ராகுல். ஆதலால், இவரின் பேச்சை யாரும் பெரிதாக எடுக்கமாட்டார்கள்.ராகுலின் பேச்சை தீவிரமாக எடுப்பதை மக்கள் நிறுத்திவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
வெட்கமாக இல்லையா மோடி
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், “ சஹாரா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு, வெட்கம் இல்லாமல், கருப்பு பணத்துக்கு எதிரான போர் என்று கூறி, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்து மக்களை துன்பப்படுத்தி வருகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.
விசாரணை வேண்டும்…
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “ சஹாரா நிறுவனத்திடம் இருந்து மோடி லஞ்சம் வாங்கினாரா இல்லையா என்று தான் ராகுல் காந்தி கேட்கிறார்?. நாங்கள் வைத்திருக்கும் ஆவணம் வருமானத்துறையினர் அளித்ததாக இருந்தால், மோடியிடம் விசாரணை செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Posts: