Nesamani Nanjundappan
''நிலத்தடி நீர் ஊற்றைக் கண்டுபிடிக்க, சித்தர்கள் பல நுட்பங்களைக் கையாண்டதாகச் சொல்கிறார்களே... அதைப் பற்றிய தகவல்களைத் தரமுடியுமா?''
சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை. வேலுசாமி பதில் சொல்கிறார்.
''சித்தர்களை, 'மந்திரம், மருத்துவம் கற்றவர்கள்’ என்றே பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள் தான், தமிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத துறைகளே இல்லை. 'நீர் வளம் இருந்தால் மட்டுமே, விவசாயம் செழிக்க முடியும். மழைநீரை சேமித்து, ஏரி, குளங்கள் மூலம் பாசனம் செய்தாலும், மழை பொய்க்கும் போது, சேமித்து வைத்த பணத்தை எடுத்து செலவு செய்வது போல, நிலத்தடி நீரை கவனமாக செலவழிக்க வேண்டும்’ என்கிறார்கள், சித்தர் பெருமக்கள்.
நீருற்று கண்டுப்பிடிக்கும் முறைகளை பண்டிதர்கள் முதல் பாமர மக்கள் வரை யாவரும், எளிதாக உணர்ந்து செயல்படும் வகையில் தெளிவாகச் சொல்லி சென்றிருக்கிறார்கள். 'புற்று கண்ட இடத்தில் கிணறு வெட்டு’ என்பது பரவலாக அறிந்த செய்தி. ஒரு மரத்தின் கிளைகள் அனைத்தும், மேலே, நோக்கி செல்ல, ஒரே ஒரு கிளை மட்டும் கீழ் நோக்கி இருந்தால், 'நிச்சயம் அந்த இடத்தில் நீருற்று இருக்கும்’ என்கிறார்கள். அவர்கள் அருளிய சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
கிணறு வெட்டுவதற்கான தேர்வு செய்த இடத்தில், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மொக்குகளை ஒரு கிலோ அளவுக்கு மாலை நேரத்தில் தரையில் குவியலாகக் கொட்டி, கூடையைப் போட்டு மூடவேண்டும். மறுநாள் காலையில் அந்த மல்லிகை மொக்குகள் நன்றாக மலர்ந்திருந்தால், 'அந்த இடத்தில் நீருற்று உள்ளது’ என்று அர்த்தம். வாடி விட்டால், 'நீருற்று இல்லை’ என்று அர்த்தம்.
இதேபோல, ஒரு கிலோ ஆமணக்கு விதையை நிலத்தில் குவியலாகக் கொட்டி, மூடி வைத்து... காலையில் கூடையைத் திறந்து பார்க்கும்போது, விதைகள் சிதறி இருந்தால், 'அந்த இடத்தில் நீருற்று உள்ளது’ என்றும், குவியல் கலையாமல் இருந்தால், 'நீருற்று கிடையாது’ என்றும் சித்தர்களின் ஜால வித்தை சூத்திரங்கள் சொல்கின்றன. சித்தர்கள் சொல்லி வைத்த இந்த நுட்பங்களை, பரிசோதனை செய்து பார்த்தபோது, நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.''
துரை. வேலுச்சாமி