
500 ரூபாய், 1000 ரூபாய்ப் பணத் தாள்கள் செல்லாதது என அறிவித்தது மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், இன்னும் ஒரு இரண்டாயிரம் ரூபாய்த் தாளைக் கூடத் தான் வாங்கவில்லை என்றும் அதற்குள் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பலரிடம் கட்டுக்கட்டாக 2000 ரூபாய்த் தாள்கள் சிக்கியது எப்படி என்றும் வினவினார்.
வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் எந்தக் கணக்கில் ஒருவர் 24,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பினார். கருப்புப் பண ஒழிப்பு மற்றும் பணமாற்று நடவடிக்கையில் இருந்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை ஒதுக்கி வைத்ததைக் குறிப்பிட்ட அவர்,
விவசாயிகளைத் தண்டிப்பதற்காகவே அரசு இவ்வாறு செய்ததாகக் குற்றஞ்சாட்டினார்.
கூலிவேலை செய்யும் 45கோடி மக்கள் அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்களுக்கெல்லாம் இழப்பீடு வழங்குவது யார் என்றும் வினவினார். 2000 ரூபாய்ப் பணத் தாள்களும் திரும்பப் பெறப்படலாம் எனக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
என்றார்.
பணமில்லாப் பொருளாதாரம் என்கிற அரசின் கொள்கையைக் குறைகூறிய சிதம்பரம், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பணமில்லாப் பொருளாதாரம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் பாதிக்கப்படுவர், ஏழைகள் பயனடைவர் என்றுகூறி அரசு ஒரு மாயையை
ஏற்படுத்துவதாகவும் ப. சிதம்பரம் குறிப்பிட்டார்.