ஞாயிறு, 29 ஜனவரி, 2017

மெரினாவில் 144 ஏன்? பின்னணி தகவல்கள்!!


'ரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழியை மெய்ப்பிக்கும்வகையில்தான், சென்னை மெரினாவில் போராட்டம், கூட்டம் நடத்த போலீஸார் பிறப்பித்துள்ள தடை உத்தரவு அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு, அறவழியில் போராட்டம் நடத்தியதைக் கண்டு. தமிழக அரசு மட்டுமல்ல. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசும் மிரண்டுதான் போயுள்ளன என்பதற்கு மெரினாவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
ஜனவரி 17-ம் தேதி காலையில் மெரினா கடற்கரைப் பகுதியில். சமூகவலை தளங்கள் மூலம் ஒன்றிணைந்த சுமார் 25 பேர் நேரம் செல்லச்செல்ல அன்றிரவுக்குள் ஆயிரமாக அதிகரித்தனர். அடுத்தடுத்த நாட்களில், தமிழர்கள் என்கிற உணர்வோடும், தமிழர்களின் பாரம்பர்யம் பறிக்கப்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்தும், தொடர்ந்து 6 நாட்களாக குடும்பம் குடும்பமாக, இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. 6 நாட்கள் வரை, இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தைப் பாராட்டிய போலீஸாரும், அரசும் 7-வது நாள், அதாவது ஜனவரி 23-ம் தேதியன்று காலை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, இளைஞர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்ற பேதமில்லாமல் தடியடி நடத்தினர். மேலும், இளைஞர்களுக்கு ஆதரவாக நின்று, குரல்கொடுத்த கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களிலும் புகுந்து, அங்கிருந்த மக்களையும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு அவர்கள் சொன்ன காரணம், ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டதால், கலைந்து செல்லுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டு பின்னரும் கலைந்து செல்லாமல் இருந்தனர் என்றும், மாணவர்கள் போராட்டத்திற்குள் சமூக விரோதிகளும், தேச விரோத சக்திகளும் புகுந்து விட்டனர் என்றும் சப்பைக்கட்டு கட்டினர்.
பல இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களுக்கு போலீஸாரே தீவைத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். அதுபற்றியெல்லாம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரே வரியில் சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ் தெரிவித்து விட்டார். சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து பீட்டாவும், மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும் உச்சநீதிமன்றத்திதை மீண்டும் அணுகி உள்ளன. ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை கோரியுள்ள இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளனர். அதற்கு முன்பாக, அதாவது ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்களது கருத்தை தெரிவிக்குமாறு விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மெரினாவில் மீண்டும் இளைஞர்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.மெரினாவில் இளைஞர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கான நிகழ்ச்சிக்கு, சமூக வலைதளங்கள் மூலமாக அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவு மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொருந்தாது என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம் மெரினாவில் போராட்டம், மனித சங்கிலி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மெரினாவில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன், நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரைக்குள் நுழையும் வழியிலும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திடீரென்று ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மெரினா போராட்டம்
மெரினா பகுதியில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய வன்முறைக்கு தமிழக அரசை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குறைகூறி வருகின்றன. போலீஸாரே வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக வலைதளம் வெளியிட்ட தகவலில், 'மீண்டும் ஒன்று சேருவோம், வாருங்கள்' என்று அழைப்பு விடுத்ததை அடுத்து, இந்த தகவல் வேகமாகப் பரவியது. ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தைப் போன்று இளைஞர்கள் மீண்டும் ஒன்று கூடிவிடக்
"இதுபோன்ற வாட்ஸ்அப் தகவல்களை மாணவர்கள், இளைஞர்கள் யாரும் நம்ப வேண்டாம். மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக கூடுவதற்கு ஏற்கனவே தடை உள்ளது. இந்த சூழ்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையிலும் சமூகத்திற்கு விரோதமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படுவதை தடுக்கும் வகையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி மெரினா, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சதுக்கம் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. ஜனவரி 28-ம் தேதி நள்ளிரவு முதல் பிப்ரவரி 12-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அதாவது 15 நாட்கள் அமலில் இருக்கும்" என்று சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த உத்தரவை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதார்கள். அதே நேரத்தில் குடும்பத்துடனும் ஓய்வு எடுப்பதற்காக வருபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் எந்தவித தடையும் இல்லை. இந்த உத்தரவுக்கு சென்னை மக்கள் அனைவரும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களின் தேவையற்ற சிரமங்களுக்கு மிகவும் வருந்துகிறோம்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் இதுவரை மெரினா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில்லை என்பதால், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்திற்கு ஒருவேளை உச்சநீதிமன்றம் தடை விதிக்கும்பட்சத்தில், மீண்டும் மெரினாவில் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு விடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையுடன், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே போலீஸாரால் மீனவக் குப்பங்களில் வன்முறை ஏவி விடப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்குமானால், அது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உண்டு என உளவுத்துறை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாகவே மெரினா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடை உத்தரவு என்றும் காவல்துறை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி அறிவித்த உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு விவகாரம், ஏ.டி.எம் மையங்கள் இன்னமும் திறக்கப்படாமல் இருப்பது, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மீதான வருமான வரித்துறை ரெய்டு, தொழிலதிபர் ரெட்டி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் போன்ற பிரச்னைகள் அனைத்தும் ஜல்லிக்கட்டு என்ற ஒரு பிரச்னையில் மாயமாய் மறைந்து விட்டன. தற்போது மெரினாவில் தடை உத்தரவைப் பற்றி மக்கள் பேசத் தொடங்கி விட்டனர். வேறு ஏதாவது ஒரு பிரச்னை வந்ததும் ஜல்லிக்கட்டு பிரச்னையை மக்களும், அரசியல்வாதிகளும் மறந்து விடுவர்.
www.vikatan.com/news/coverstory/79087-why-did-chennai-police-impose-144-prohibitory-order-in-marina-latest-updates.art