திங்கள், 30 ஜனவரி, 2017

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சாராமாரி கேள்வி

அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? தடியடி நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சாராமாரி கேள்வி. இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு...
சென்னை தடியடி: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிகட்டு போராட்டத்தின் போது காவல்துறை தடியடியில், காயமடைந்தவர்களுக்கு நிபந்தனையின்றி உயர்தரசிகிச்சை வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தமிழ்மணி, கார்த்திக், கண்ணையா ஜோசப், ஜாகிர் ஹுசேன், கருணாகரன், லக் ஷ்மணன்,  அருள் பிரகாஷ், அய்யனார் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், காவல்துறை தடியடியில் தங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்- தாக்குதல் நடத்திய காவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்- துறை ரீதியான நடவடிக்கை வேண்டும்- இந்த 
தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிகட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாராக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் சேர்த்து எவ்வித நிபந்தனையுமின்றி உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தடியடியின்றி சாதுர்யமாக கையாண்டதாக கூறி திருச்சி காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனனை நேரில் அழைத்து நீதிபதி ஆர்.மகாதேவன் பாராட்டு தெரிவித்தார்.