செவ்வாய், 31 ஜனவரி, 2017

ரூபாய் நோட்டு தடை பொருளாதார வளர்ச்சி குறையும் – உண்மையை ஒத்துகொண்ட அருண்ஜெட்லி

நாட்டையே உலுக்கிய பிரதமர் மோடியின்  ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், நடப்பு நிதியாண்டில்(2016-17) பொருளாத வளர்ச்சி 6.5 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
இது முன்பு 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் 0.50 சதவீதம் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் நேற்று தொடங்கியது. மக்கள்அவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் கூட்டாக அமர வைத்து பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அதன்பின், 2016-17ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 3 காலாண்டுகள் அதாவது 9 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளன. இன்னும் 3 மாதங்கள் உள்ளன. இந்நிலையில், 2017-18ம்  நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டும், ரெயில்வே பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது-
பாதிப்பு
நாட்டில் கள்ள நோட்டையும், கருப்புபணத்ைதயும் ஒழிக்க கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாகக் குறையும். இதற்கு முன் பொருளதார வளர்ச்சி என்பது 7.1 சதவீதமாகக் கணிக்கப்பட்டு இருந்தது.
அடுத்த நிதியாண்டு
அதேசமயம், அடுத்த நிதியாண்டான 2017-18ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருக்கிறது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும்.
தனிநபர் வருமான வரி விகித்தில் மட்டும் குறைத்தால் போதாது, கார்ப்பரேட் வரியையும் குறைத்து, உயர் வருமானம் உள்ளவர்களையும் படிப்படியாக வருமான வரிக்குள் கொண்டு வர வேண்டும்.
அடிப்படை ஊதியம்
ஒவ்வொருவரின் கண்ணில் இருந்து வரும் கண்ணீரையும் துடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் நோக்கத்தின் அடிப்படையில், ஏழ்மையை விரட்ட அனைவருக்கும் அடிப்படை ஊதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி
மறைமுக வரி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம், நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்த கணிப்பின் அடிப்படையில் பார்த்தால், உலகில் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியா முன்னணியில்இருக்கும்.
ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையால், நடப்பு நிதியாண்டில் குறிப்பிட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி, விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பால் கொள்முதல், கரும்பு கொள்முதல், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கொள்முதல் பாதிக்கப்பட்டது.
நீண்டகால பயன்
புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு புழக்கத்துக்கு வந்தவுடன் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்பும். ஏப்ரல் மாதத்துக்குள் பணத்தட்டுபாடு நீங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை என்பது குறுகிய காலத்துக்கு சிரமம் அளித்தாலும், நீண்ட காலத்தில் பயன் அளிக்கும்
தனிநபர் வருமானவரி விகிதம், ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரைத்தாள் கட்டணம், கார்ப்பரேட் வரி ஆகியவை குறைக்கப் பட வேண்டும். பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 60 முதல் 65 டாலர் அளவுக்கு  உயர்ந்ததால், இந்தியாவின் நுகர்வு குறைந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து எங்கள் பணி தொடர ஒத்துழைக்கலாமே!