செவ்வாய், 31 ஜனவரி, 2017

குடியரசு தினம் உருவான வரலாறு..!

நாட்டின் 68-ஆவது குடியரசுதினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாள் உருவான வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம்.
சுதந்தரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலம். 1929-ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், முழுமையான சுதந்தரமே இலக்கு என்பது தீர்மானிக்கப்பட்டது. இதற்கான போராட்‌டத்தை காந்தியடிகள் முடிவு செய்து அறிவிப்பார் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
மக்கள் உணர்வுகளை அகிம்சை வழியில் திருப்ப நினைத்த காந்தியடிகள், 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளை சுதந்தர நாளாகக் கொண்டாடும் படி அறிவித்தார். அவரது அறிவுறுத்தல்படி, அதே நாளில் நாட்டின் கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதியிலும் கூடிய மக்கள், ‘பொருளாதாரம், அரசியல், ‌கலாசாரம்‌, ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்கு கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்’ என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.
சுதந்தரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் நாள் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டது. இதன் பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அந்த சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து 1930-ஆம் ஆண்டு காந்தியடிகளால் அறிவிக்கப்பட்ட சுதந்தர நாளான ஜனவரி 26-ஆம் நாள் முதல் அரசியலைப்புச் சட்டத்தை அமல்படுத்த பண்டித நேரு தலைமையிலான அரசு முடிவு செய்து செயல்படுத்தியது. அந்நாளே இந்தியக் குடியரசு நாளாக 1950-‌ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.