ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கருப்பு பட்டை அணிந்து 70 ஆயிரம் ஊழியர்கள் நாளை பணியாற்றுகிறார்கள்…ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு வருவாய் துறை எதிர்ப்பு


கருப்பு பட்டை அணிந்து 70 ஆயிரம் ஊழியர்கள் நாளை பணியாற்றுகிறார்கள்…ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு வருவாய் துறை எதிர்ப்பு
நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில், சமீபத்தில் எடுக்க சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தியாகிகள் தினமான இன்று வருவாய் துறையில் உள்ள 70 ஆயிரம் ஊழியர்கள் கருப்புபட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். 
அமைப்புகள்
இந்த போராட்டத்தில் இந்திய வருவாய் சேவையில் உள்ள, மத்திய கலால் வரித்துறையின் அதிகாரிகளின் அனைத்து இந்திய அமைப்பு, அனைத்து இந்திய கலால்வரி ஆய்வாளர்கள் அமைப்பு, அனைத்து இந்திய மத்திய கலால்வரி மற்றும் சேவை வரி அமைச்சக அதிகாரிகள் அமைப்பு ஆகியவை இதில் பங்கேற்கின்றன.
முடிவுகள்
ஜி.எஸ்.டி. வரியில் சில குறிப்பிட்ட வரிகளை மாநிலங்கள் தன்னிச்சையாக வசூலித்துக் கொள்ளலாம் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்தது. இதுமத்தியஅரசின் இறையான்மை செயல்பாட்டுக்கு கேடுவிளைவிக்கும் என்று வருவாய் துறை ஊழியர்கள் கருதி  கருப்புபட்டையை அணிந்து பணியாற்ற உள்ளனர்.
அதேசமயம், ஜி.எஸ்.டி. வரி சமூகமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து விதமான ஆதரவுகளையும் மத்திய வருவாய் பிரிவினர் அளிப்பார்கள். வெளிப்படைத்தன்மையுடன், நியாயமான முறையில் வரிகள் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலங்களுக்கு அதிகாரம்
கடந்த 16-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் கடல் எல்லையில் 12 மைல் கடற்பரப்புக்குள் வரும் சரக்கு கப்பல்களிடம் இருந்து வரி வசூலிக்கலாம், மேலும், ஆண்டுக்கு ரூ.1.50 கோடிக்கு குறைவாக விற்றுமுதல் இருக்கும் வரி செலுத்துவோர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்ற அறிவிப்புகள் மாநில அரசுக்கு சார்பாக எடுக்கப்பட்டன.
எதிர்ப்பு
இந்த முடிவுகளுக்கு மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை அதிகாரிகள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை மத்தியஅரசு உடனடியாக திரும்பப் பெற்று, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அது நாட்டின் நலனுக்காக இருக்க வேண்டும். வர்த்தகத்துறையினர், தொழில்துறையினர் பாதிக்கப்படுகிறார்கள் என்று கவலைப்பட்டால், அது நாட்டின் நலன் ஆகாது, அது பொருளாதார வளர்ச்சி ஆகாது என மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளனர்.