திருப்பூரில் பி.ஜே.பி. நிர்வாகி கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் அருகில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி வைத்தும், மோடி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொலையாளிகள் தப்பிச் சென்றதாகவும் சொல்லப்பட்ட நிலையில், பி.ஜே.பி. நிர்வாகி கொலை செய்யப்படவில்லை என்பதும், தற்கொலை செய்து கொண்டதையும் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வருகிறது பி.ஜே.பி. மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 20-ம் தேதி, "கோயம்புத்தூர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் விக்னேஷ் வாசுதேவன் எனும் இளைஞர் தேசிய கொடியை ஏந்தி இருந்ததால் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்" என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஹெச்.ராஜா. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஜாதி, மத பேதமின்றி நாங்கள் போராடி வருகிறோம். நடக்காததை நடந்ததாகச் சொல்லி போராட்டத்தை நிறுத்த கலவரத்தை ஏற்படுத்த முயல வேண்டாம்' என மாணவர்கள் நேரடியாகவே எச்சரித்தனர்.
இந்நிலையில், மெரினா போராட்டத்தில் பின்லேடன் படத்துடன் இஸ்லாமியர்கள் வலம் வந்ததாக புகைப்படத்தை காட்டி பி.ஜே.பி. நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால் "அந்த புகைப்படம் மெரினாவில் எடுக்கப்பட்டதில்லை என்றும், அந்த வாகனம் ராஜி என்பவருக்கு சொந்தமான வாகனம். இஸ்லாமியர் வாகனம் அல்ல" எனவும் சொல்லப்பட்டது. இதிலும் பி.ஜே.பி. நிர்வாகிகள் கண்டனத்துக்கு உள்ளாகினர். "மாட்டை அறுத்து சாப்பிடும் முஸ்லிம்களும், தலித்துகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது” என்று பி.ஜே.பி.யினர் சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல் மெரினா போராட்டத்தின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதைச் சொல்லி சர்ச்சையை கிளப்பினர் பி.ஜே.பி. நிர்வாகிகள். அதற்கு பதிலளித்த மாணவர்கள், "இந்திய இறையாண்மையை நாங்கள்தான் கட்டிக்காப்பாற்றுகிறோம். முற்றிலுமாக புறக்கணிக்கிறோம். மற்ற மதத்தினர் அவர்கள் கடமையை நிறைவேற்ற உரிமை உண்டு. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. அதைத்தான் நாங்கள் நிறைவேற்றிக் காட்டினோம். ஆனால் இதைச்சொல்லி மத்திய அமைச்சர் இந்து - முஸ்லிம் பிரிவினையை தூண்டுகிறார்," என காட்டம் காட்டினர்.
இப்படி மத பிரச்னையை திட்டமிட்டே பரப்பி வருவதாக பி.ஜே.பி. அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில், இன்னுமொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அழுத்தமான கோரிக்கைகளோடு நடந்த மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், திருப்பூரில் பி.ஜே.பி. வடக்கு மாவட்ட துணைத் தலைவர் முத்து என்கிற மாரிமுத்து மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் தொங்கியிருந்தார். அவரது உடல் அருகே மோடியின் படத்துக்கு செருப்பு மாலை போட்டும், தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டும் இருந்தது. மேலும் பி.ஜே.பி. மற்றும் இந்து முன்னணி கொடியுடன் கறுப்புக் கொடி ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. TPR12345 என எழுதப்பட்டு, அதில் 3 என்ற எண் அடித்து விடப்பட்டிருந்தது. இதனால் திருப்பூரில் பதற்றமான சூழல் உருவானது. பி.ஜே.பி. நிர்வாகி கொலை, மோடி படத்துக்கு செருப்பு மாலை, தேசியக்கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்டது போன்றவற்றால் பெரும் பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
உடனடியாக திருப்பூர் வந்த தமிழிசை சவுந்திரராஜன், "பி.ஜே.பி.திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைத்தலைவர் முத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கலாம். தமிழகத்தில் பி.ஜே.பி. நிர்வாகிகள் கொல்லப்படுவது தொடர்கிறது. சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்," என வலியுறுத்தினார்.
இந்நிலையில் போலீஸார் இது தோடர்பாக விசாரணையை துவக்கினர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவில் முத்து கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. முத்துவின் உடலில் சிறிய அளவிலான காயங்கள் கூட இல்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முத்துவுக்கு பெண் ஒருவருடன் தவறான பழக்கம் இருந்து வந்ததாகவும், அந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக சிலரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலையை கொலை எனச்சொல்லி, பதற்றத்தை உருவாக்கியது யார்? எதற்காக இப்படிச்செய்தார்கள் என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே கொலையைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த பி.ஜே.பி. நிர்வாகிகள் போராட்டத்தை ரத்து செய்துள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துவின் குடும்பத்தாரை சந்தித்துப் பேச இருந்த நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்னுமொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது பி.ஜே.பி.
http://www.vikatan.com/news/tamilnadu/79151-is-bjp-trying-to-convert-party-functionarie-suicide-as-murder.art