செவ்வாய், 31 ஜனவரி, 2017

அரசே வேணாம் நாங்க பாத்துக்குவோம்’’ மீனவர்களுக்கு நேர்ந்த கதி; இளைஞர்களின் நெகிழ்ச்சி நிதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சென்னையில் நடந்த வன்முறையில் மெரீனா ஒட்டியுள்ள மீனவ குப்பம் போலீசாரால் கடுமையாக தாக்கியும் குடிசைகளுக்கு தீயும் வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு வழக்கு உள்ளிட்ட போலீசாரின் தொந்தரவுகளால் மீன்பிடி தொழில், மீன் வியாபாரம் இல்லாமல் அத்தியாவசிய செலவுக்கும் மருத்துவ செலவிற்கும் போதிய வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், மாணவர்களின் சென்னை மெரீனா போராட்டத்தில் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலோனோர் ஆதரவு அளித்து பேருதவியாக இருந்து வந்தனர். போலீசாரின் தடியடியால் மீனவப் பகுதிக்குள் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட மீனவப் பகுதிகளில் கடந்த 29ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு சென்னை காவல் துறை பிறப்பித்துள்ளது. இதனால் ஏராளமான மீனவக் குடும்பங்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எந்தவித உதவியும் இன்றி மீனவர்கள் உதவி செய்ததுபோல, தற்போது அவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் தற்போது இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக சென்னை மீம்ஸ் என்ற பெயரில் வங்கிக் கணக்கை உருவாக்கியுள்ளனர். இதுவரை ரூ.2 லட்சம் திரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் நிதியை பிப்ரவரி 10ம் தேதி வரை வங்கிக்கணக்கில்  செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செலுத்துபவர்களின் பெயர் மற்றும் விவரங்களையும், மீனவர்களிடம் நிதி அளித்ததற்காக விவரத்தையும் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் செய்யாத நிலையில், இளைஞர்களின் இந்த முயற்சி, ‘‘அரசே வேணாம் நாங்க பாத்துக்குவோம்’’ என்பதுபோல் தோன்றுகிறது என்றே கூறலாம். எனவே இந்த முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டுக்கள்!!
 

source: kaalaimalar