ஜல்லிக்கட்டுக்காக போராடியபோது என்னை கொல்ல சதி செய்து போலீசார் திட்டமிட்டு தடியடி நடத்தினர். எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என சமூக ஆர்வலர் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன், மதுரை கலெக்டர் வீரராகவராவை நேற்று சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘அலங்காநல்லூரில் போலீசார் தடியடி நடத்தி, ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராடியவர்களை கலைத்தனர். போலீசார் திட்டமிட்டு என்னை கொல்ல சதி செய்தனர். போலீசார் சட்ட விதிகளை மீறி நடந்துள்ளனர்.
திட்டமிட்டு சதி செய்து தடியடி நடத்தியுள்ளனர். என் மீது முன் விரோதத்தை மனதில் வைத்து, மதுரை எஸ்பி, அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
மேலும் என்னை தனியாக அழைத்துச்சென்று, ‘உயிரோடு திரும்ப மாட்டாய்’ என மிரட்டினர். கலவரம் நடந்ததற்கு போலீசார்தான் காரணம். அப்பாவி மக்கள் வீடுகளுக்கு சென்றும் மிரட்டி உள்ளனர்.
எனவே, சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் வந்து துவக்கி வைக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாமல் போனது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல்வரின் எதிர்ப்பாளா்கள் ஆலோசனைபடி வன்முறையை போலீஸ் கட்டவிழ்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.