திங்கள், 30 ஜனவரி, 2017

ஏடிஎம்களில் பணம் எவ்வளவு எடுக்கலாம்? ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் பணமெடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்-மில் இருந்து பணமெடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து விலக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏடிஎம்களில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் பின்னர் 2 ஆயிரத்து 500 எனவும், அதன்பிறகு அது ரூ.4,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அது தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரையில் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிப். 1 முதல் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க தற்போது உள்ள உச்சவரம்பான 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவு நீக்கப்படுகிறது என்றும் அதே நேரத்தில், வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சேமிப்புக் கணக்கு உள்ளவர்கள் தங்களது கணக்கில் இருந்து வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், நாளொன்றுக்கு 10 ஆயிரம் மட்டுமே ஏடிஎம்களில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தற்போது கட்டுப்பாடு உள்ளது.