சனி, 28 ஜனவரி, 2017

அறிக்கையில் சின்ன சந்தேகம் மாண்புமிகு முதல்வரே.

‘ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னரும், கூட்டம் கலைந்துபோகவிடாமல் தடுத்த சமூக விரோதச் சக்திகள், காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் மீது தீயிட்டு வன்முறையைத் தூண்டின’’ - சட்டப்பேரவையில் ஆதாரங்களுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்.
இவ்வாறான ஒரு முதல்வரின் வாசகங்கள் போராட்டதை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை, அரசையும் அதன் பாதுகாப்பையும் சேர்த்துத்தான் கேள்விக்குள்ளாக்குகிறது. ஜல்லிக்கட்டு வெற்றிக்கு அரும்பாடுபட்ட முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். ஓ.பன்னீர்செல்வம் ஆகிய உங்களிடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை. ஏனென்றால், நாங்கள் உங்களை முதல்வராகத் தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் முதல்வராகத் தேர்ந்தெடுத்தவர் இப்போது இல்லை என்பதால், ‘தானாக’ தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீங்கள். ஆனால், தமிழக ‘முதல்வர்’ என்ற வகையில் நீங்கள் ‘செயல்’படுவதனால் இதைக் கேட்கிறோம்..
‘ஜல்லிக்கட்டு நடத்தத் தடை நீங்கிவிட்டது’ என்ற செய்தியை அதிகாரபூர்வ அறிக்கையாக வெளியிடாமலேயே, மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தவும், அதனை தலைமை தாங்கித் தொடங்கிவைக்க நீங்கள் வந்ததும்... அவசர சட்டத்தைவிட அவசரமாக நடந்தது வேடிக்கை. மாணவர்கள் கூட்டத்தினுள் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என்று அவ்வளவு ஆதாரங்களுடன் ‘விளக்கிய’ உங்கள் உளவுத்துறை, மதுரையில் இருந்த மக்களின் மனநிலை என்னவென்று கூறவில்லையா? ‘மக்களுக்காகவே நான்’ என்றிருந்த ஒரு கட்சியின் முதல்வராகிய நீங்கள்... மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளாமல் செயல்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது. 6 நாட்கள் எந்த அசம்பாவிதமும் இன்றி நடந்த போராட்டத்தில் ஏழாவது நாள் மட்டும் திடீரென்று எங்கிருந்து சமூக விரோதிகள் புகுந்தனர் என்று உளவுத்துறை கூறவில்லையா? அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இரவில், ஒரே நேரத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர் எனபதும் வினோதமாக உள்ளது. 
மெரினா
ஓர் அரசுசார் நீதிபதிக்கே திங்கட்கிழமை மாலை மூன்று மணியளவில்தான் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிக்கை கையில் கிடைக்கிறது எனும்போது, ஆறு நாட்கள் போராடி வந்திருந்த ஒரு மாணவன், ஒரு சாமான்யன் எந்த நம்பிக்கையில் கலைந்துசெல்ல முடியும்? “ஒரு முதல்வர் தொலைக்காட்சியில் அறிக்கை கொடுக்கிறார். அது போதாதா’’ என்று கேட்கிறார்கள். காவல் துறையினர் குடிசைகளையும் வாகனங்களையும் கொளுத்துவதை நேரடி காணொலியாகப் பதிவு செய்தபோதே - அது ‘morphing’ என்கிறார்கள். நாளை, ‘‘அறிக்கையில் பேசியது முதல்வர் அல்ல... அது, ‘morphing’ ’’ என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? காவிரி நீர், மணல் கொள்ளைத் தடுப்பு, கிரானைட் குவாரி தடை என்று உங்கள் ‘இதய தெய்வம் புரட்சித் தலைவி’ வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கைகளும் சட்டங்களும் கடைப்பிடிக்கப்படாத நிலையில் ஒரு மாணவன், ஒரு சாமான்யன் வெறும் வாய்வழி அறிக்கைகளை எப்படி நம்புவான்? 
மேலும் உங்கள் அறிக்கையில், “காவலர்கள் யாரும் தடியடியோ, துப்பாக்கிச் சூடோ நடத்தவில்லை. அவர்கள் ‘குறைந்தபட்ச பலப்பிரயேகம்’ செய்து மக்களை வெளியேற்றினார்கள்’’ என்றீர். காவலர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதை ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான வீடியோக்களும் நேரடி மக்கள் சாட்சிகளும் உள்ளன. “நான் ஆதாரங்களுடன்தான் அறிக்கைவிடுக்கிறேன்” என்கிறீர்கள். உங்கள் தலைசிறந்த உளவுத்துறை இந்தச் செய்திகளையும் ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லையா? ‘‘7,000 காவல் துறையினருள் 111 பேர் அடிப்பட்டனர் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்’’ என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 லட்சம் இளைஞர்கள் போராட்டக் களத்தில் இருந்தனரே, அவர்களுள் எத்தனை பேர் மண்டை உடைந்தது; எத்தனை பெண்கள் குழந்தைகள் தாக்கப்பட்டனர் என்ற எந்த ஒரு தகவலும் உங்களிடம் இல்லையா... காவல் துறையினர் மட்டும்தான் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களா... அந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் - தமிழக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா? மீனவர்கள் மற்றும் குப்பத்து மக்களின் வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டதை ஊடகங்கள் காட்டின. காவலர்கள்தான் அந்த அசம்பாவிதத்தை நிகழ்த்தினர் என்று அந்த மக்கள் கூறினர். உங்கள் சத்தியத்தின்படி அது சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்... அப்படியே இருக்கட்டும். சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட காவலர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமும் நீதியும் இந்த மக்களுக்குக் கிடையாதா? அவர்களைப்பற்றிய ஒரு வார்த்தைகூட உங்கள் அறிக்கையில் இல்லையே?
ஜல்லிக்கட்டு
2011-ல் இருந்த UPA கூட்டணியின்போதுதான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது என்றும், அப்போது தி.மு.க அந்தக் கூட்டணியில் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளீர்கள். UPA தொடங்கப்பட்ட காலத்தில், அதன் உறுப்பினராக இல்லாதபோதிலும்... 4 எம்.பி-க்களுடன் UPA-வுக்கு அ.தி.மு.க ஆதரவளித்ததை நீங்கள் நினைவுப்படுத்தத் தவறிவிட்டீர்கள். தற்போது அ.தி.மு.க அரசால் ஜல்லிக்கட்டுக்குத் தடையை நீக்கி அவசர சட்டம் இயற்றப்பட முடியும் எனும்போது, 2011 தி.மு.க ஆட்சிக்குப் பிறகு இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க, அவசரமாக இல்லாமல் பொறுமையாகவே இந்தச் சட்டத்தினை அமல்படுத்தியிருக்கலாமே?
ஒரு தீவிரவாதி, பின்லேடன் படத்துடன் அங்கு இருந்ததற்கான புகைப்பட சாட்சியம் இருப்பதாகவும் அறிக்கையில் கூறினீர்கள். புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர்களைப் பிடித்து விசாரித்திருந்தால் உண்மை உங்களுக்கு உரைத்திருக்குமே? அத்துனை லட்சம் மக்களை ஒரே நேரத்தில் அப்புறப்படுத்திய காவல் துறையினரால் ஒருவரை அப்புறப்படுத்த முடியாதா?
அவ்வளவு நாட்கள் போராடி, அறப்போராட்டத்தால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த எங்கள் இளைஞர்கள், தற்போது தங்கள் வெற்றியைக் கொண்டாட முடியாமல், கடுமையாகத் தாக்கப்பட்ட தங்கள் சக இளைஞர்களையும் உதவ வந்த மீனவ மற்றும் குப்பத்து மக்களின் கையறு நிலையையும் கண்டு குற்ற உணர்ச்சியில் உள்ளனர். அந்த அறச்சீற்றத்தின் வெளிப்பாடுதான், நாடே கொண்டாடிய ஒரு மாபெரும் நிகழ்வைக் கொண்டாட ஆளில்லாமல் தவித்த தமிழகத்தின் அவலநிலை. இந்த அவல வரலாறும் எங்களையே சாரும்.
ஜனநாயகத்தைக் கொண்டாடுவது... மக்களின் உரிமை!
கண்டிப்பாக அந்த உரிமை அறவழியில் மீட்கப்படும்!!
- பா.நரேஷ் 

http://www.vikatan.com/news/coverstory/79008-dear-chief-minister-could-you-please-clarify-the-doubt-in-your-statement.art