ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னெழுச்சியாக லட்சக்கணக்கில் கூடிய மாணவர்போராட்டத்தை ஃப்ரீ செக்ஸ் என்று அழைத்தால் கூட 25000 பேர் வருவார்கள் என்று கொச்சை படுத்தி பேசிய விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பதில் முன்னணியில் இருப்பவர் ராதாராஜன் . இவர் ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு போராட்டத்தை விமர்சித்து பிரச்சனையில் சிக்கி கொண்டவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்கள் போராட்டத்துக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.
சமீபத்தில் லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு ராதாராஜன் அளித்த பேட்டியில் தனித் தமிழ்நாடு வேணும் கேட்டா கண்டிப்பா வந்து 25,000 பேர் வருவாங்க , ப்ரீ செக்ஸுன்னு ஒரு டாபிக் வெச்சா அதுக்கு ஒரு 50,000 பேர் கண்டிப்பா வருவாங்க
இந்த நாட்டுல ரூல் ஆப் லா… அதுதான் எல்லாத்தைவிடவும் முக்கியம். சுப்ரீம்கோர்ட்ல ஒரு ஜட்ஜ்மெண்ட் ஆர்டர் வந்திருக்குன்னா அதுக்கு நம்ம கட்டுப்படுத்தான் ஆகணும் என்று பேசியிருந்தார். இது பரவலாக விமர்சிக்கப்பட்டது.
உணர்வோடு லட்சக்கணக்கில் போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தி ராதாராஜன் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் ராதாராஜனின் ஃபேஸ்புக் முடக்கப்பட்டது. அவரது ஃபேஸ் புக் அக்கவுண்டை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முடக்கிதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதாராஜன் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளித்தார்.
ராதாராஜனுக்கு எதிராக வழக்கறிஞர் ராஜ்சேகர் , தடா ரஹீம் உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ராதாராஜனின் பேச்சு தங்களை கொச்சை படுத்திவிட்டதாக அவர்மீது பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேட்டி அளித்த பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி நளினி கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் இளைஞர்கள் திரண்டு போராடினர். நாங்களும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டோம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் அவதூறாக பேட்டி அளித்திருந்தார். இது எங்கள் பெண்மையை கேவலப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
இது குறித்து அவர்மீது அவதூறு வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளோம். விரைவில் அது விசாரணைக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.