திங்கள், 2 ஜனவரி, 2017

முதலமைச்சர் ஆவாரா சசிகலா?

ஆங்காங்கே ஒரு சில எதிர்ப்புகள்... ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விகள்.. நிலுவையில் இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு... அரசியல் அரங்கில் அனுபவமற்றவர் என்ற பேச்சுக்கள்.. எல்லாம் தாண்டி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 
ஆகச் சிறந்த ஆளுமை... எதற்கும் அவ்வளவு எளிதில் வளைந்து கொடுக்க மாட்டார்.. அவரது நம்பிக்கையைப் பெறுவது அத்தனை சுலபமல்ல... வெற்றிப் பெண்மணி என்றெல்லாம் பெயரெடுத்தவர் ஜெயலலிதா.அப்படிப்பட்ட ஒருவருக்கு சசிகலா தவிர்க்க முடியாத நபராக, நம்பிக்கையைப் பெற்றவராக இருந்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட தோழி என்பதைத் தாண்டி, அவரது அரசியல் முடிவுகளிலும் சசிகலாவின் பங்கு இத்தனை ஆண்டு காலமும் தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கும் என நாம் நம்புவதற்குரிய அனைத்து சாத்தியங்களும் உண்டு. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியைச் சேர்ந்த அத்தனை அமைச்சர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகோபித்த ஆதரவை சசிகலாவுக்கு வழங்குகிறார்கள் என்பது சாதாரணமானதல்ல.
ஓபிஎஸ் ஆகட்டும், தம்பிதுரையாகட்டும் இன்னும் அந்தக் கட்சியில் மூத்தவர்கள் அல்லது பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் என யாராலும் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி விட முடியாது என்றே முடிவு செய்திருக்கிறார்கள்.
அந்த இடத்தை சசிகலாவால்தான் நிரப்ப முடியும் என்று அவர்கள் நினைத்ததற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் வெறுமனே பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தானா... ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பது மட்டும்தானா...
இப்போதுதானே ஆட்சிக்கு வந்தோம் அதற்குள் ஆட்சி கலைந்து விட்டால் என்ற அச்சம் மட்டும்தானா... அதைத் தவிர மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் இடத்தில் வைத்துக் காட்ட சசிகலாதான் பொருத்தமானவர் என்றும் அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.
அதனால்தான் பெரிய சலசலப்பு எதுவும் இல்லாமல் சசிகலாவால் பொதுச் செயலாளர் பதவியைப் பிடிக்க முடிந்திருக்கிறது.
ஜெயலலிதாவிற்கே கட்சியும் சின்னமும் இவ்வளவு சுலபத்தில் கிடைக்கவில்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இருந்து வெளிப்படையான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர். மக்கள் மத்தியில் உரையாற்றியவர். பணியாற்றியவர். ஆனால் சசிகலா அரசியல் களத்தில் வெளிப்படையாகச் செயல்பட்டதில்லை. ஜெயலலிதாவின் உடன் வரும் நிழலாக இருந்தாரே தவிர வெளிப்படையாக அவர் எந்த மக்கள் மன்றத்திலும் தோன்றவில்லை, பேசவுமில்லை.எனினும் சசிகலாவிற்கு கட்சியினரின் பெரும்பான்மையான ஆதரவு இருந்ததால் அவர் பொதுச் செயலாளராக சிரமமின்றி வர முடிந்தது.கட்சியினரின் அடுத்த கோரிக்கை அவர் முதலமைச்சராக வேண்டும் என்பது. அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற சசிகலாவிற்கு எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்து, அவர் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவது மிக எளிதாகவே இருக்கும். அதற்குப் பெரிதாக எதிர்ப்பு எதுவும் எழப்போவதில்லை.ஆனால் சசிகலா பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டதைப் போல முதலமைச்சர் பதவியையும் உடனடியாக ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.தற்போது மார்கழி மாதம் என்பதால் இது தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே கட்சியினரிடம் எழும் என்றும், அதை அவர் தை பிறந்ததும் ஏற்றுக் கொள்வார் என்றும் அதிமுக வட்டாரத்தில் ஒரு சிலர் சொல்கின்றனர்.அதே சமயத்தில் இந்த விஷயத்தில் சசிகலா அவசரப்பட மாட்டார் என்று மற்றொரு தரப்பு தெரிவிக்கிறது.
கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் தன்னை தலைவியாக ஏற்றுக் கொண்டார்கள். அதிமுகவின் கடை கோடித் தொண்டர்களும், அதிமுக வாக்காளர்களும் தன்னை ஜெயலலிதாவின் இடத்தில் வைத்துப் பார்க்கிறார்களா என்பதை முழுமையாக அறிந்துகொள்ள சசிகலா சிறிது அவகாசம் எடுத்துக் கொள்வார் என்கிறது அந்தத் தரப்பு.
அதே சமயத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு தலைவியாக தன்னை நிறுவிக் கொள்ள அவரால் முடியும் என்றும் அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.எனினும் சொத்துக் குவிப்பு வழக்கின் மிச்ச சொச்சம், ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் ஆகிய தடைக்கற்களை சசிகலா முழுமையாகக் கடக்க வேண்டியிருக்கிறது.
- க.சிவஞானம்


http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/special-news/35/74212/sasikala-become-tamilnadu-cm..-is-it-possible