வியாழன், 2 மார்ச், 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன! March 02, 2017

தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், இன்று காலை துவங்குகின்றன.

தேர்வுக்காக மாநிலம் முழுவதும், 2 ஆயிரத்து 427 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் உள்பட சுமார் ஒன்பது லட்சத்து, 30 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். 

தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள் கட்டுகளை பாதுகாக்க, 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்; ஒவ்வொரு தேர்வு மையத்திலும், இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு, தனியார் பள்ளித் தேர்வு மையங்களில், மின் பிரச்னை ஏற்படாமல் இருக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும், உதவி பொறியாளர் தலைமையில், தடையில்லா மின்சாரம் வழங்க, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு குடிநீர் வசதி வழங்க, உள்ளாட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும், ஐந்து மையங்களுக்கு, ஒரு மொபைல் குழு வீதம், 500 குழுக்கள் அமைத்து, வினாத்தாள் வழங்கல் மற்றும் விடைத்தாள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன் வைத்திருக்கக்கூடாது என்றும், தேர்வின்போது, ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒழுங்கீன செயலுக்கு உடந்தையாக பள்ளி நிர்வாகம் இருந்தால், அதற்கான தேர்வு மைய அங்கீகாரமும், பள்ளி அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
new gen media