"ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!" என்று பாரதியார் எழுதிய வரிகளுடன் தொடங்கியது அந்த நிகழ்வு. கொளுத்தும் வெயிலில் பெசன்ட் நகர் கடற்கரையோரம் சுமார் 300 பெண்கள் நீலநிறத்தில் உடையணிந்து ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். புரட்சி உற்சாகமூட்டும் வரிகளும், அநீதி, ஊழல், முறைகேடான ஜனநாயகத்திற்கு எதிரான பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தார்கள். மெரினாவில் 2017 ஜனவரியில் கண்ட மக்கள் புரட்சிக்குப் பிறகு கடற்கரையோரம் மக்கள் ஒன்றாகக் களமிறங்கி குரல் கொடுப்பது என்பது அடிக்கடி நிகழும் செயலாகி விட்டது. தைப்புரட்சி முழுவதுமாய் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆனால் மக்கள் தங்களது தேவைகளுக்காக வீதிக்கு இறங்கி தாங்கள்தான் போராடியாக வேண்டும் என்பதை அவர்களுக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கிறது. மேலும் போராட்ட வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பெருவாரியான மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது. அந்த வகையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஒரு சல்யூட்!
இன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ’மக்கள் குரல்’ என்கிற பெயரில் கூடிய பெண்கள் குழுவினர், உண்மை ஜனநாயகத்துக்கு ஆதரவாக தாங்களே எழுதி கம்போஸிங் செய்த பாடல் வரிகளைப் பாடியும், ஜனநாயகத்தில் மக்களின் ஓட்டு யாருக்காக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிகழ்த்திய நாடகமும் முழுவதும் கலை வடிவத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஒட்டியே இருந்தது.
"ஓட்டுப் போட வா!
உரிமை கோர வா!
நம் நாடு அல்லவா
நம் கடமை அல்லவா!தலைமையைத்தான் தேர்ந்தெடுக்கும் நேரமல்லவா!
நல்ல தலைமை கையில் நாட்டைக் கொடுக்கும் தருணமல்லவா!மக்கள் குரல் கேட்காம,
மக்கள் குறைய தீர்க்காம,
எங்கதான் இருக்கீங்க,
என்னத்ததான் செய்யறீங்க,
இங்க வந்து சொல்லுங்க"
என்று அனைவரும் ஒருமித்த குரலில் பாடினார்கள்.
"தமிழகம் படுத்துடுச்சா?" என்று தொடங்கி அரங்கேற்றப்பட்ட நாடகம், நம்மிடையே என்ன மாதிரியான வேட்பாளர்கள் இருக்கிறார்கள்? ஆனால், மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. 'குடும்ப ஆட்சியும், இலவச பொருட்களும் இனிமேல் எடுபடாது' என்கிற எண்ணம் அவர்களிடம் தெளிவாக இருந்தது.
முற்றிலும் எதிர்பார்க்காத அம்சமாக, நிகழ்வில் பங்கேற்ற பெண்களில் ஒருவர், பிரதிமா கிருஷ்ணமூர்த்தி, சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூர்த்தியின் தம்பி மகள். அவர் பேசுகையில், "எங்க பெரியப்பா காலத்தில் போராட்டம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்த நாடு இன்று இப்படியிருக்கிறதே என்கிற கவலைதான், நான் போராட்டத்தில் பங்கெடுக்கக் காரணம். உடல்நிலை முடியாமல் போனாலும் எப்படியாவது பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனவலிமையுடன் இதில் இணைந்து கொண்டேன். ஓ.பி.எஸ்ஸோ அல்லது ஈ.பி.எஸ்ஸோ எங்களுக்குத் தேவை ஜனநாயகம் அதற்குத்தான் இங்கே எல்லோரும் வந்திருக்கோம்” என்றார்.
"இதுவரை இல்லாமல் திடீரென எப்படி இந்த விழிப்புணர்வு?" என்று 'மக்கள் குரல்' அமைப்பின் ஊடகத் தொடர்பு பிரிவினரிடம் கேட்டோம். "சமீபத்தில் தமிழக அரசியலில் ஏற்பட்ட குழப்பநிலைதான் முக்கியக் காரணம். நாங்க நியாயமான முறையில ஓட்டு போட்டுத்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்களுக்குள்ளே ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னை மற்றும் ஆட்சி மாற்றப் பிரச்னையில் மக்களை அவர்கள் மதிக்கவேயில்லை. இனிமேலும் மக்கள் தாமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த அறவழிப் போராட்டம். மீண்டும் இங்கே தேர்தல் தேவை என்பதை முக்கியமாக வலியுறுத்துகிறோம். இப்போது முந்நூறு பேர் வரை கூடியிருக்கிறோம். எங்களைப் பார்த்துவிட்டு இன்னும் பலர் எங்களுடன் இணைந்துள்ளார்கள். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இணைந்து, பெண்களால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையுடன் தொடங்கினோம். ஆனால், பெண்கள் மட்டுமே என்று இல்லாமல் அனைவருமே இதில் இணைந்து ஜனநாயகத்திற்காகக் களமிறங்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். தற்போது தமிழகத்தில் நாங்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை மற்ற மாநிலங்களில் இருக்கும் எங்கள் நண்பர்களும் கவனித்து வருகிறார்கள். அவர்கள் வழியாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றம் கொண்டு வரமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்கள்.
"வரப்போகும் தேர்தல்களில் உங்களில் யாரேனும் வேட்பாளராக களமிறங்குவீர்களா?" என்றதற்கு, “எங்கள் அடையாளம் மக்கள் குரல் என்பது மட்டுமே, நாங்கள் எந்தக் கட்சியும் இல்லை; வேட்பாளர்களைக் களமிறக்கும் எண்ணமும் இல்லை. உண்மை ஜனநாயகம் அமையும் வரை, மக்களாகிய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று தீர்க்கமான பதில் அவர்களிடமிருந்து வந்தது.
நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழி!
-ஐஷ்வர்யா
புகைப்படங்கள்: ஜெரோம்
புகைப்படங்கள்: ஜெரோம்
source: vikatan