திங்கள், 13 மார்ச், 2017

வங்கிகளில் நடைபெற்ற மோசடிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி; ஐசிஐசிஐ-க்கு முதலிடம்

நடப்பு நிதியாண்டின் (2016-2017) ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில் வங்களில் நடந்த மோசடிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது ரிசர்வ வங்கி. இதில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்திலும் பாரத ஸ்டேட் வங்கி இரண்டாம் இடத்திலும் உள்ளது.
13/3/2017,
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு  கிட்டதட்ட  2,400 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிக் கிளைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிவர்தனை நடந்துள்ளதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.  இந்நிலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள, வங்களில் நடந்த மோசடி பட்டியலில்  455 மோசடி வழக்குகளைக் கொண்டு தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. 429 மோசடி வழக்குகளைக்கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இரண்டாமிடத்திலும்,  ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 244 வழக்குகளும், ஹெச்டிஎப்சி வங்கி 237 வழக்குகளைக்கொண்டு முறையே 4 மற்றும் 5 வது இடத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள இத்தகவலின்படி எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளன. அடுத்ததாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.2,250.34 கோடிக்கும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1998.49 கோடிக்கும் மோசடிகள் நடந்துள்ளன.

மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் பொறுத்தவரை எஸ்பிஐ வங்கியில் 64 அதிகாரிகளும், ஹெச்டிஎப்சி வங்கியில் 49 அதிகாரிகளும் ,ஆக்ஸிஸ் வங்கியில் 35 அதிகாரிகளும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த பட்டியல்கள் அனைத்தையும் நிதி அமைச்சகத்திடம்  ஒப்படைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதன்படி பார்த்தால் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தனியார்  மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 3,870 மோசடிகள்  நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ. 17,750.27 கோடி என்றும் தெரியவந்துள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பின் மட்டும் இதுவரை 400 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.