வியாழன், 16 மார்ச், 2017

நம்மை ‘பாடாய் படுத்தும்’ அரசு வங்கிகள் – வாராக்கடன் எவ்வளவு தெரியுமா?

அரசு வங்கிகளின் வாராக்கடன் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியோடு, ரூ. 6 லட்சத்து 6 ஆயிரத்து 911 கோடியாக அதிகரித்துள்ளது. என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி, உருக்கு, கட்டுமான நிறுவனங்கள், ஜவுளி, பின்னலாடை நிறுவனங்கள் அதிகமாக கடனை திருப்பிச் செலுத்தாததால் இந்த வாராக்கடன் அதிகரித்துள்ளது
மாநிலங்கள் அவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியதாவது-
அரசு வங்கிகளின் வாராக்கடன் 2016ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியோடு, ரூ. 6 லட்சத்து 6 ஆயிரத்து 911 கோடியாக அதிகரித்துள்ளது.
 
கடந்த 2015-16ம் ஆண்டு முடிவில் இது ரூ.5 லட்சத்து 2 ஆயிரத்து 68 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் மட்டும் ரூ. ஒரு லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் வாராக்கடன் என்பது ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 65 கோடியாக இருந்தது.
தனியார் நிறுவனங்களைப் பொருத்தவரை, 2016ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிவரை ரூ.70 ஆயிரத்து 321 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதியில் ரூ.48 ஆயிரத்து 380 கோடியாக இருந்தது. 2014-15ம் ஆண்டில் இது ரூ.31 ஆயிரத்து 576 கோடியாக இருந்தது.
இந்த அளவுக்கு வாராக் கடன் உயர்வதற்கு மின்துறை, சாலை, கட்டுமானம், ஜவுளித்துறை, உருக்கு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் அதிகமான கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததே காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த திவால்சட்டம் பயன்படுத்தப்படும்.
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் வங்கி மட்டும் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் இறுதிவரை ரூ.6.36 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளது. அதில் ரூ.81 ஆயிரத்து 442 கோடி வாராக்கடனாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.