மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த குந்தன் சந்திரவத், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் தலையை வெட்டுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக பேசியுள்ளார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த பல தலைவர்கள் பங்கெடுத்த இந்த கூட்டத்தில் இவர் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களை இந்துத்வா பயங்கரவாதிகள் கொலை செய்ததை பெருமையாகவும் அவர் மேடையில் பேசியுள்ளார். இதுவரை குஜராத் கலவரங்களை பற்றி மறைவில் மற்றுமே பேசி ஆனந்தம் அடைந்து வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தற்போது பொது வெளியிலும் அது குறித்து பேசியிருப்பது, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் மக்களை இனியும் ஏமாற்ற முடியாமல் எப்போதும் போல மக்களை மத அடிப்படையில் ப்ளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
குந்தன் சந்திரவத் மேடையில் பேசிய போது, “அந்த குற்றவாளி, அந்த துரோகி, இந்துக்களின் ரத்தத்தில் சிவாஜியின் பெருமை இல்லை என்று எண்ணியுள்ளாரா, இந்துக்களுக்கு அது போன்ற உணர்வுகள் இல்லை என்று எண்ணி உள்ளாரா? நான், டாக்டர் குந்தன் சந்திரவத் இங்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். என்னிடம் போதுமான அளவு சொத்து இருக்கிறது, அதனால் நான் இதனை தயிரியமாகவே கூறுவேன். என்னிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்று உள்ளது விஜயனின் தலையை வெட்டி என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என்னுடைய வீடு சொத்து அனைத்தையும் உங்களுக்கு தந்துவிடுகிறேன். இது போன்ற துரோகிகள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள்.” என்று கூறியுள்ளார். இவர் தனது இந்த பேச்சின் மூலம் ஜனநாயக படுகொலை செய்து கொண்டிருக்கையில் இறுதியில் நகை முரணாக “இது போன்ற துரோகிகள் ஜனநாயகத்தை கொலை செய்ய தகுதியற்றவர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் குஜராத் குறித்து பேசிய அவர், “குஜராத்தை நீங்கள் மறந்து விட்டீர்களா? நீங்கள் 56 பேர்களை கொன்றீர்கள். நாங்கள், இதே இந்து சமூகம் 2000 பேரை சுடுகாட்டிற்கு அனுப்பினோம். அவர்களை பூமிக்கு அடியில் புதைத்துவிட்டோம்,” என்று கூறியுள்ளார்.
இணையத்தில் வைரலாக பரவிவரும் இவரது இந்த பேச்சு பெரும்பாலன மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டத்தை அப்பகுதியை சேர்ந்த ஜனாதிகர் சமிதி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். கூற்றுக்கு ஆதரவு சேர்க்க நடத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினர்களுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பை குஜராத் கலவரங்களை நினைவுபடுத்தி மடை மாற்றி தங்களின் பலமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். முனைந்து வருகிறது.
கேரளாவில் கடந்த 50 வருடங்களாக நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் CPM இடையேயான மோதல்களில் இருதரப்பிலும் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது இரு தரப்பினர்களுக்கு இடையே நடைபெற்று வரும் வன்முறையும் இரு கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் தான் என்று கூறப்படுகிறது.
சந்திரவத்தின் இந்த பேச்சு குறித்து அவர் பேசும் போது அதே மேடையில் இருந்த உஜ்ஜைன் பாஜக எம்.பி. சிந்தாமணி மால்வியா, சந்திரவத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கொல்லப்படுவதால் ஏற்பட்ட தனது கோபத்தால் அவ்வாறு பேசியாத கூறியுள்ளார். சந்திரவத்தின் இந்த பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஆர்.எஸ்.எஸ். அந்த கருத்துக்கு பொறுப்பேற்காது என்று கூறினாலும் அவரது அந்த கருத்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை.
kaalaimalar