
லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறப்பித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுரேஷை, பணி நிரந்தரம் செய்வதற்காக. 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜும் கைதானார். துணை வேந்தர் கணபதி
பணிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்களின் தகுதியையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக 76 பேராசிரியர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், லஞ்ச பணத்தை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் துணை வேந்தர் கணபதி பெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வங்கி ஆவணங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், லஞ்சப்புகாரில் சிக்கியுள்ள கோவை பல்கலக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறப்பித்துள்ளார். கணபதி மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை, அவரது பணியிடை நீக்கம் தொடரும் என்றும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.