
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தகவல்களை திரட்டி, ஆவணமாக்கும் வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு எமிஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, பள்ளி மற்றும் மாணவர்களின் பெயர், வயது, முகவரி, பெற்றோர் தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இவற்றின் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில், ஒரு கோடியே 8 லட்சம் மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் மட்டும் சுமார் 70 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை மேற்கொண்டு வருகிறது.
மேலும் தமிழக பட்ஜெட்டில், புதிதாக 4 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.