புதன், 15 மார்ச், 2017

முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

15/3/2017,
முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்


ஜே.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு நீதிகேட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் முத்துகிருஷ்ணன், ரோகித் வெமுலா உள்ளிட்டோரின் மரணங்கள் மூலம் இந்தியாவில் சமதர்மம் கேள்வி குறியாகி விட்டதாக வேதனை தெரிவித்தனர். 

அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை பல்கலைக்கழகங்கள் உருவாக்கவில்லை எனவும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற நிலை தொடரும் சூழலில் இந்தியா முழுவதும் மாணவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவர் என்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

இதேபோல், ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணணின் மர்ம மரணத்திற்கு நீதிக் கேட்டு சேலத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். 

மேலும் உயிரிழந்த முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.