ஞாயிறு, 19 மார்ச், 2017

சடலங்களின் நாடான ஈராக்! அமைதி ஏற்படுத்துவதாக கூறி நாட்டையே அழித்த அமெரிக்கா!

அமெரிக்காவின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஐ.எஸ். அமைப்பும், ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என கூறி அமெரிக்காவும், பொதுமக்களின் பிணங்களை தின்று வருகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி உண்மையை உணர்த்துகிறது.
ஷிகாப் அயெட் மற்றும் சிலர் தங்களது பிள்ளைகள் மற்றும் மனைவியின் உடலை சுமந்து கொண்டிருந்த அந்த வண்டியை சேறும் சகதியும் மிகுந்த சுமார் 3 கிலோ மீட்டர் தூர சாலையில் மிகுந்த போராட்டத்திற்கு இடையே மொசூலில் உள்ள தங்களது  இல்லத்தில் இருந்து தள்ளிச் செல்கின்றனர். ராய்ட்டர் செய்தியாளர் அவர்களை பின்தொடர்கிறார்.
அவர்களது வண்டியைப் போல் அவர்களுக்கு பின்னால் முந்தைய நாள் பிறந்த குழந்தையின் உடல் உள்ளிட்ட பல உடல்களைச் சுமந்த மேலும் 4 வண்டிகள் அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஐ.எஸ். அமைப்பு ஆட்சி செய்த பகுதியில் தங்கிருந்த தங்கள் மீது அமெரிக்க – ஈராக் கூட்டுப் படைகள் நடத்திய வான் வழித் தாக்குதலில் தங்களது உறவினர்கள் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்போது ஒருவர் ராய்ட்டர் செய்தியாளரிடம் கூறுகிறார்.
40 வயதான கூலித் தொழிலாளி அயெட் தனது மகனின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை செய்தியாளரிடம் உருவிக் காட்டுகிறார். 3 அரை வயதான அவரது மகன் கண்கள் மூடிய நிலையில், கன்னத்தின் வலது புறத்தில் குழு விழுந்து  பெரிய காயத்துடன் சடலமாக கிடக்கின்றான்.
2 வான் வழித் தாக்குதல்களில் 3 வீடுகள் தரைமட்டமானதாக அயெட் கூறுகிறார்.
” ஐ.எஸ். அமைப்பினர் எங்கள் வீட்டில் பதுங்கிக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
நாங்கள் வீட்டின் மற்றொரு பகுதியில் ஒளிந்து கொண்டிருந்தோம். 15 நிமிடங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பிறகு இடிபாடுகளில் சிக்கிய எனது குடும்பத்தினர் உடல்களை மீட்டு அடக்கம் செய்யச் செல்கிறேன்.
இதற்கு பிறகு மீண்டும் இங்கு வந்து எனது 3 மகள்களின் உடல்களைத் தேட வேண்டும் (அழுகிறார்).
தற்போது உடல்கள் அழுக ஆரம்பித்துள்ளன. இதனால் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும்.
அருகே உள்ள கிராமத்தில் உள்ள அடக்கத் தலத்தில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்கிறோம்.”
வண்டிகளில் 15 உடல்கள் இருந்ததை ராய்ட்டர் செய்தியாளர் நேரில் பார்த்துள்ளார்.
மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இருந்து ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்துவதால், அவர்களை அழிக்கும் போது, பொதுமக்கள் அதிக அளவில் இறப்பதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
மொசூல் நகரில் இருந்து உயிர் தப்பிய பலர் கூறும் போது, ஐ.எஸ். அமைப்பினர் ஒரு இடத்தில் இருந்து தாக்குதல் நடத்திவிட்டு, உடனடியாக அங்கிருந்து சென்று விடுகின்றனர். ஆனால் அமெரிக்க கூட்டு படைகள் அதற்கு பிறகு அங்கு தாக்குதல் நடத்துகின்றன. இதனால் பொதுமக்கள் தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். இது பல இடங்களில் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.
பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்படுவது குறித்து ஐ.நா. மன்றமும் கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்க வான் வழித் தாக்குதல் நடத்தத் தொடங்கியதற்கு பிறகு இதுவரை பொதுமக்களில் 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் போர்க்கள பத்திரிக்கையாளர்கள் நடத்தி ஆய்வில் 2,590 பேர் அமெரிக்க வான் வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : ராய்ட்டர்
http://www.reuters.com/article/us-mideast-crisis-iraq-mosul-toll-idUSKBN16Q070?utm_campaign=trueAnthem:+Trending+Content&utm_content=58ce6ce604d30117f953fcdf&utm_medium=trueAnthem&utm_source=twitter

Related Posts: